வேலூர்: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலை வழக்கில் கைதாகி தண்டனை பெற்ற முருகன் வேலூர் மத்திய ஆண்கள் சிறையிலும், அவரது மனைவி நளினி பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நளினி, முருகன் வேலூர் சிறை துறை மூலம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உள்துறைச் செயலாளர் ஆகியோருக்குக் கடிதம் அனுப்பினர்.
அக்கடிதத்தில் கூறப்பட்டதாவது: 'சென்னையில் உள்ள தனது தாய் பத்மா (81) வயது மூப்புக்காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார். அவரைச் சந்திக்கவும், கவனித்துக்கொள்ளவும், இலங்கையில் உள்ள தனது மாமனார் வெற்றிவேல் இறந்து ஓராண்டு ஆனதால் அவருக்கு சடங்குகள் செய்யவும், தனக்கும் தனது கணவர் முருகனுக்கும் 30 நாட்கள் பரோல் வழங்கவேண்டும்' என்று கூறப்பட்டிருந்தது.
நளினி, முருகனுக்கு பரோல் வழங்கப்பட்டால், அவர்கள் எங்கு தங்குவார்கள்? அவர்களுக்காக செய்யப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகள் என்ன? என்பது குறித்து மாவட்ட காவல் துறையிடம் வேலூர் சிறைத் துறையினர் அறிக்கை கேட்டிருந்தனர்.
இதனை அடுத்து, கரோனா பரவல் அதிகமாக இருப்பதால் பெரும்பாலான காவல் துறையினர், கரோனா தடுப்பு, முழு ஊரடங்கு கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர் எனவும்; இதனால் நளினி, முருகனுக்கு பாதுகாப்பு வழங்குவதில் சிக்கல் உள்ளது எனவும்; எனவே இச்சூழலில் நளினி, முருகனுக்கு பாதுகாப்பு வழங்க அனுமதிக்க இயலாது என்று வேலூர் மாவட்ட காவல் துறை திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: 'தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு நிதி உதவி' - பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்