முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி, அவரது கணவர் முருகன் உள்ளிட்ட ஏழு பேர் கடந்த 28 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். நளினி வேலூர் மத்திய பெண்கள் சிறையிலும், அவரது கணவர் முருகன் ஆண்கள் சிறையிலும் தனித்தனியே அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் நளினி, தனது மகள் ஹரிதாவின் திருமணத்துக்காக பரோலில் செல்ல அனுமதி கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் காணொலி மூலம் ஆஜராக நளினிக்கு விருப்பம் இல்லாததால் அவரை ஜூலை 5ஆம் தேதி(இன்று) நேரில் ஆஜராகும்படி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதேசமயம், சர்வதேச அளவில் உற்று நோக்கப்படும் முக்கிய வழக்கின் கைதி என்பதால், நளினியை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்னைக்கு அழைத்துச் செல்ல தமிழக காவல்துறை ஏற்பாடுகளை செய்தன. டிஎஸ்பி தலைமையில் 50 போலீசார் படைசூழ காவல் வாகனம் மூலம் நளினியை சென்னைக்கு அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டது. அதன்படி, இன்னும் சிறிது நேரத்தில் நளினியை சென்னைக்கு அழைத்து செல்ல உள்ளனர்.
இதனால் வேலூர் மத்திய பெண்கள் சிறை வளாகம் பரபரப்புடன் காணப்படுகிறது. இவ்வழக்கின் விசாரணை முடிந்த பிறகு மீண்டும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இன்று மாலை நளினி வேலூர் சிறைக்கு அழைத்துவரப்பட உள்ளார். இதையொட்டி சிறையை சுற்றிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.