முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட பேரறிவாளன் உள்பட ஏழு பேர் கடந்த 28 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர்.
அவர்களை விடுதலை செய்யும் விவகாரத்தில் தமிழக ஆளுநர் முடிவெடுக்கலாம் என உச்ச நீதிமன்றம் கடந்த ஐந்து மாதத்திற்கு முன்பு உத்தரவிட்டது.
தமிழக ஆளுநர் ஏழு பேரை விடுதலை செய்ய கால தாமதம் செய்வதையடுத்து, வேலூர் சிறையில் உள்ள முருகன், நளினி தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிறைத்துறை அதிகாரியிடம் உரிய அனுமதி பெற்று கடந்த இரண்டு வார காலமாக வேலூர் ஆண்கள் சிறைச்சாலையில் முருகனும், உரிய அனுமதி பெறாமல் திடீரென ஒருவாரமாக நளினியும் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர். சிறை விதிகளை மீறியதால், நளினியின் பார்வையாளர்கள் சந்திப்பை அதிகாரிகள் மறுத்துள்ளனர்.
இதனிடையில் இவர்கள் இருவருக்கும் சில தினங்களுக்கு முன்பு சிறைக்குள் குளுக்கோஸ் ஏற்றப்பட்டது. இருப்பினும் இரண்டு பேரும் தங்களது கோரிக்கை நிறைவேறும்வரை உண்ணாவிரதத்தைத் தொடரப்போவதாக அறிவித்திருந்தனர்.
முருகன், தான் சிறையில் உயிரிழந்தால் தனது உடல் உறுப்புகளை தானம் செய்யும்படி தமிழக அரசுக்கு உருக்கமான கோரிக்கை வைத்திருந்தார்.
இதனிடையில் நேற்று (பிப்.14) வேலூர் அரசு அடுக்கம்பாறை தலைமை மருத்துவமனை ஊழியர்கள் நளினிக்கு ரத்தப் பரிசோதனை செய்வதற்காக வந்து, ரத்த மாதிரியை எடுத்துச் சென்றனர். நளினியை கண்காணிப்பதற்காக இரண்டு மருத்துவர்கள் சிறைத்துறை தரப்பில் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இரண்டு பேரின் உடல்நிலை இன்று மீண்டும் மோசமான நிலையில், அவர்களை சிறை மருத்துவமனையில் சிறைக்காவலர்கள் அனுமதித்தனர்.
அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக சிறைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். நளினி மற்றும் முருகன் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.