வேலூர் மாவட்டம் கொசப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் உதயா (எ) உதயகுமார். இவர் மீது ஏற்கனவே வேலூர் தெற்கு காவல் நிலையத்தில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் வீட்டிலிருந்து இருசக்கர வாகனத்தில் சென்ற உதயகுமாரை அதே பகுதியைச் சேர்ந்த நான்கு பேர் கொண்ட கும்பல் சரமாரியாகக் கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.
இதில் பலத்த காயமடைந்த உதயகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வேலூர் தெற்கு காவல் துறையினர், உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் அருகிலிருப்பவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். காவல் துறையின் முதற்கட்ட விசாரணையில் கொலையுண்ட உதயகுமாருக்கு ஏற்கனவே இரண்டு திருமணங்களாகி, ஆறு பிள்ளைகள் இருப்பதாகவும், இந்நிலையில் அவர் மீண்டும் தனது உறவுக்கார பெண்ணை காதலித்து திருமணம் செய்யவிருந்ததால், அப்பெண்ணின் சகோதரன் ஆண்ட்ரோஷ், அவரது நண்பர்கள் இம்மானுவேல், நவின், நிர்மல் ஆகியோருடன் இணைந்து உதயகுமாரை கொலைசெய்ததும் தெரியவந்துள்ளது.
மேலும் தப்பியோடும்போது வேலூர் அரசு மருத்துவமனை அருகே நடந்துசென்ற பெண்ணிடமிருந்து 10 சவரன் தங்க சங்கிலியைப் பறித்து சென்றதும் தெரியவந்துள்ளது. அதேபோல் தேடப்படும் குற்றவாளிகளில் இருவர் மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து வேலூர் தெற்கு காவல் துறையினர் தனிப்படை அமைத்து குற்றவாளிகளைத் தேடும் முயற்சியைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க:பூட்டியிருந்த பள்ளியினுள் நுழைந்து கஞ்சா புகைத்த 5 பேர் கைது!