வேலுார் மாவட்டம் குடியாத்தம் அருகே பேரணாம்பட்டு ஊராட்சியைச் சேர்ந்தவர் ரூபிணி (27). இவருக்கும் குடியாத்தம் அடுத்த கார்த்திகேயாபுரம் பகுதியைச் சேர்ந்த பாண்டியன் என்பவருக்கும் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இந்த நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ரூபிணி நான்கு ஆண்டுகளாக தனது தாய் வீட்டில் வசித்துவந்தார். இவர் தனியார் காலணி தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை செய்துவந்தார். இவருக்கு முகேஷ் என்ற ஐந்து வயது சிறுவன் உள்ளான். சிறுவன் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. படித்துவந்தான்.
தனியாக வசித்துவந்த ரூபிணி, ஏற்கனவே மன உளைச்சலில் இருந்ததாகவும், தாய் வீட்டில் ஏற்பட்ட குடும்பப் பிரச்னை காரணமாக மேலும் மன வேதனையில் இருந்துள்ளார். இந்நிலையில்,நேற்று அவர் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த முகேஷை அழைத்துக் கொண்டு வீட்டின் அருகே இருந்த கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
இதையடுத்து உடனடியாக அங்கிருந்தவர்கள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் ரூபிணி, முகேஷ் இருவரின் உடல்களை மீட்டனர்.
தொடர்ந்து உடல்கள் உடற்கூறாய்வுக்காக பேரணாம்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்தத் தற்கொலை சம்பவம் குறித்து பேரணாம்பட்டு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். குடும்பப் பிரச்னையில் ஐந்து வயது மகனுடன் தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.