நாளை தமிழ்நாட்டில் மொஹரம் அனுசரிக்கப்படவிருக்கும் நிலையில், வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பகுதியில் மொஹரத்தை முன்னிட்டு ஷியா மற்றும் சன்னி பிரிவு இஸ்லாமியர்களில் சிலர் மொஹரம் மாதம் முதல் 10 நாட்கள் இமான் ஹுசைன் கொல்லப்பட்டதை நினைவு கொண்டு துக்க நாட்களாக அனுசரித்து வருகின்றனர்.
மொஹரம் இசுலாமிய ஆண்டின் முதல் மாதம் ஆகும். இஸ்லாத்திற்கு முன்னிருந்த அரபிகள் இதனைப் புனித மாதங்களுள் ஒன்றாகக் கருதி இதில் போர் செய்வதை தவிர்த்து வந்தனர். இந்நிலையில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்த மாதத்தில் நபிகள் நாயகத்தின் பேரன் இமான் ஹுசைனை, எசீத் என்பவர் சமாதான பேச்சு வார்த்தைக்கு கர்பாலா எனும் இடத்திற்கு அழைத்து, பின் போரிட்டான். அப்போரில் இமான் ஹுசைன் கொல்லப்பட்டார். இந்த தினத்தை ஷியா முஸ்லீம் பிரிவினினர் துக்க தினமாக அனுசரித்து வருகின்றனர்.
மேலும் மொஹரம் மாதத்தில் முதல் பத்து நாட்கள் ஷியா பிரிவு இஸ்லாமியர்கள் அவருடைய தியாகத்தை நினைவு கொண்டு 40 நாட்களுக்கு கறுப்பு உடை அணிந்தும், 10 நாட்கள் உண்ணா நோன்பு இருந்தும், தங்களது உடலை வருத்தி, தியாகத்திருநாளை நினைவு கொண்டு இருப்பார்கள். மேலும் மொஹரம் 8 ஆம் நாள் இரவு இமான் ஹுசைன் வீடு அனைத்தும் எதிரிகளால் தீயிட்டு கொளுத்தப்பட்டதை நினைவில் கொண்டு தீயை மிதித்து துக்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
மேலும் 40 நாட்களுக்கு எந்த ஒரு நல்ல காரியமும் செய்யமாட்டார்கள். இதே போல் சன்னி பிரிவு இஸ்லாமியர்களும் உண்ணா நோன்பு இருந்தும் அதில் சிலர் தீயை மிதித்தும் இமான் ஹுசைன் தியாகத்தை அனுசரித்து வருகின்றனர்.