வேலூர்: வாலாஜாபேட்டையில் காணாமல் போன 4ஆம் வகுப்பு பள்ளி மாணவனை, நண்பனின் வீட்டில் இருந்து போலீசார் மீட்டுப் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை பூக்காரத் தெருவைச் சேர்ந்தவர் விஜய். இவரது மகன் கிரண், அதே பகுதியில் உள்ள அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் 4ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில், நேற்று (ஜனவரி 18) பள்ளிக்குச் சென்ற மாணவன், நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதைத் தொடர்ந்து, மாணவனின் பெற்றோர் பள்ளிக்குச் சென்று விசாரித்ததில், வகுப்பறையில் புத்தகப்பையை வைத்துவிட்டு, சிறுநீர் கழிப்பதாகச் சென்று வருவதாகக் கூறிச் சென்ற மாணவன், அதன் பிறகு இங்கே வரவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர், மாணவனைப் பல இடங்களில் தேடி பார்த்துள்ளனர். ஆனால், அவர் எங்கும் கிடைக்காத நிலையில், வாலாஜாபேட்டை போலீசில் இரவு புகார் கொடுத்துள்ளனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், பெற்றோருடன் கோபித்துக் கொண்டு தனது நண்பனின் வீட்டுக்கு மாணவர் சென்றது தெரிய வந்துள்ளது.
இதைத் தொடர்ந்து, வி.சி மோட்டூரில் உள்ள நண்பனின் வீட்டில் மாணவன் தங்கி இருந்ததை அறிந்த போலீசார். மாணவனை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இதன் பின்னர், போலீசாருக்கு பெற்றோர் நன்றி தெரிவித்தனர்.
இதையும் படிங்க: பொதுக் குழு வழக்கில் ஓபிஎஸ்க்கு மீண்டும் பின்னடைவு! உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு என்ன?