வேலூர்: தமிழ்நாட்டில் திமுக ஆட்சியின் சாதனை விளக்க பொதுக் கூட்டங்கள் மாவட்டந்தோறும் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் வேலூர் மாவட்டம் காட்பாடி தொகுதிக்குட்பட்ட பொன்னையில் காட்பாடி வடக்கு ஒன்றியம் சார்பில் திமுக ஆட்சியின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. நீர்வளம் மற்றும் கனிமவளத்துறை அமைச்சர் துரைமுருகன் பொதுக்கூட்டத்திற்கு தலைமை வகித்தார்.
இந்நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன், அனைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார், வேலூர் எம்பி கதிர் ஆனந்த் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
அமைச்சர் துரைமுருகன் மேடையில் பேசுகையில், “கட்சியிலிருந்து எந்த இடத்தை வாங்க வேண்டும் என்றாலும், விற்க வேண்டும் என்றாலும் என்னோட பொறுப்பு தான். அது மட்டுமல்லாமல் வங்கியில் பணம் போடுவதும், எடுப்பதும் நான் தான். கட்சியில் ஆள் சேர்ப்பதும், கட்டு கட்டுவதும். அதுபோல கட்சியில் பல பஞ்சாயத்துகளும் வரும். ஆனால் அதை எல்லாம் சமரசமாக இரு தரப்பிலும் பேச்சு வார்த்தை நடத்தி முடித்து விடுவேன். இது போன்ற பல வேலை சுமை இருப்பதன் காரணத்தினால் என்னால் தொடர்ந்து வர முடியவில்லை. இதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் பெண்களுக்கு இலவச பஸ் பயணம், வீடு தேடி கல்வி திட்டம், இல்லம் தேடி மருத்துவம் என பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் சமூக நீதி ஆட்சி நடைபெற்று வருகின்றது. சட்டசபைக்கு நான்தான் தலைவர், அதற்கு பெயர் தான் அவை முன்னவர்” என்றார். மேலும், காட்பாடி தொகுதியில் தற்போது நடைபெற்று பல்வேறு திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார்.
இந்நிகழ்ச்சிக்கு முன்னதாக இன்னிசை கச்சேரி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் காட்பாடி வடக்கு ஒன்றிய செயலாளர் சி.ரவி அனைவரையும் வரவேற்றார். மேலும் இந்நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட அவைத் தலைவர் முகமது சகி, துரைசிங்காரம், மாவட்ட பொருளாளர் நரசிம்மன், வேலூர் மாநகர துணை மேயர் சுனில்குமார், காட்பாடி ஒன்றிய குழு பெருந்தலைவர் வேல்முருகன், துணை ஒன்றிய குழு தலைவர் சரவணன், காட்பாடி தொகுதி தெற்கு ஒன்றிய செயலாளர் கருணாகரன், மேற்கு ஒன்றிய செயலாளர் தணிகாசலம், காட்பாடி வடக்கு பகுதி செயலாளர் வன்னியராஜ், பொதுக்குழு உறுப்பினர் தயாநிதி, காந்தி நகர் பகுதி செயலாளர் பரமசிவம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.