வேலூர்: வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த தமிழ்நாடு- ஆந்திரா எல்லையில் அமைந்துள்ள மோர்தாணா அணையின் நீர்பிடிப்பு பகுதியான ஆந்திர மாநிலத்தில் பெய்த தொடர் மழை காரணமாக அதன் முழு கொள்ளவான 37.72 அடியை எட்டியது. இதனையடுத்து பாசன வசதிக்காக அணையைத் திறக்க விவசாயிகள் வலியுறுத்திவந்த நிலையில், இன்று அமைச்சர் துரைமுருகன் பாசனத்திற்கு அணையைத் திறந்தார்.
மோர்தானா அணையில் வலது, இடது புற கால்வாய்கள் மூலம் விநாடிக்கு 175 கனஅடி நீரும், கௌண்டன்ய ஆற்றில் 100 கனஅடி நீரும் என மொத்தம் விநாடிக்கு 250 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இது, 10 நாள்களுக்கு செல்லும். இதன் மூலம் 8,367 ஹெக்டேர் விளைநிலங்களும், 64 கிராமங்களும் பயனடையும்.
அணை திறப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன், மேகதாது அணை விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது. ஒருபோதும் அணை கட்டக்கூடாது என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமர் மோடியிடம் தெரிவித்துள்ளார்.
விரைவில் தொடங்கவுள்ள சட்டப்பேரவை கூட்டத்திற்குப் பின்பு டெல்லி சென்று இந்த அணை விவகாரம் தொடர்பாக ஒன்றிய ஜல் சக்தி அபியான் அமைச்சரை சந்தித்துப் பேசவிருக்கிறோம்" என்றார்.
இதையும் படிங்க: 'ஓஎன்ஜிசிக்கு அனுமதி அளித்தால் சாகும்வரை போராடுவோம்'