வேலூர்: நேதாஜி விளையாட்டு அரங்கில் வேலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் பொது நூலகத்துறை இணைந்து நடத்தும் மாபெரும் புத்தக கண்காட்சி 2023-ஐ, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தொடங்கி வைத்து அரங்குகளை பார்வையிட்டார். சுமார் 200 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சியில் குடியாத்தம் சட்டப்பேரவை உறுப்பினர் அமுலு விஜயன், வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், வேலூர் எஸ்பி ராஜேஷ் கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த புத்தகத் திருவிழா வரும் மார்ச் 6ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அரங்குகளை பார்வையிட்ட பின் நிகழ்ச்சியில் பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், மாணவர்களுக்கு விளையாட்டாக புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஆசிரியர்கள் ஏற்படுத்த வேண்டும். அவ்வாறு செய்தால் மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்.
கடந்த காலங்களில் நாட்டின் நடப்புகளை தெரிந்து கொள்ள வானொலி மட்டுமே இருந்தது. இன்று தொலைக்காட்சி உள்ளிட்ட பல தகவல் தொடர்பு சாதனங்கள் அதிகரித்துள்ளன. இவைகள் எல்லாம் பயன்படுத்திக் கொண்டு மாணவர்கள் தங்கள் அறிவு திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். உலகில் புத்தகங்களை அதிகமாக படித்தவர்கள் தான் உலக தலைவர்களாக மாறி உள்ளனர்.
உலக அறிவை தெரிந்து கொள்ளவும், நாட்டில் நல்லது கெட்டது தெரிந்து கொள்ளவும் எப்படி ஒழுக்கமாக உடன் இருக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளவும், மொழிப்பற்று, நாட்டுப்பற்று இனப்பற்று ஆகியவற்றை தெரிந்து கொள்ளவும், நாகரிகமாக வாழவும், நல்ல சமுதாயத்தை உருவாக்கவும், புத்தகங்களை நாம் அதிக அளவில் படிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் வளர்மதி, இவ்வளவு பெரிய புத்தக கண்காட்சிக்கு மாணவர்களுடன் வருவது இதுவே முதல் முறை. மாணவர்கள் இந்த புத்தக கண்காட்சியை கண்டு மலைத்து போனார்கள். மாணவர்களை தங்களது பெற்றோர்களுடன் வந்து புத்தகங்கள் வாங்கி படிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய எழுத்தாளர் அழகிய பெரியவன், உலகை மாற்றும் புத்தகம் என்ற பொன்மொழியை எடுத்துரைத்து, புத்தகங்கள் தான் தலைவர்களை உருவாக்கும் எனவும், புத்தக கண்காட்சி ஒரு சிறந்த முன்னெடுப்பு என்றும் கூறினார். அரசு சிறப்பாக ஏற்படுத்திக் கொடுத்துள்ள இந்த புத்தக கண்காட்சியை மாணவர்கள் பயன்படுத்துக்கொள்ள வேண்டும்.
பெற்றோர்கள் மாணவர்களுக்கு அதிக புத்தகங்களை வாங்கி கொடுக்க வேண்டும். யாராலும் திருட முடியாத அறிவு செல்வத்தை தங்களது பிள்ளைகளுக்கு வழங்க அதிக புத்தகங்களை வாங்கி கொடுக்க வேண்டும். இது போன்ற புத்தக கண்காட்சி பல இடங்களில் தொடங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
இதையும் படிங்க: ஏலே படத்தின் அழகியல் கிழித்தெறியப்பட்டுள்ளது - ஹலிதா ஷமீம் வேதனை!