கரோனா தடுப்பு நடவடிக்கையால் தமிழ்நாடு முழுவதும் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு அரசு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் நியாய விலைக் கடைகளில் ரூ.1000 மற்றும் இலவச பொருட்களை நிவாரணமாக வழங்க அறிவிப்பு வெளியிட்டது.
அதன்படி மாநிலம் முழுவதும் ஏப்ரல் 2ஆம் தேதி முதல் ரேசன் கடைகளில் நாளொன்றுக்கு 100 பேருக்கு, நிவாரண நிதி மற்றும் இலவச பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள நியூ டவுன், டீச்சர்ஸ் காலனி, ஜீவா நகர், ஜாப்ராபத் உள்ளிட்ட பகுதிகளில், குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரண பொருட்கள் மற்றும் 1000 ரூபாயை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் வழங்கினார்.
அனைத்து பகுதிகளிலும் தமிழ்நாடு அரசின் அறிவிப்பை கடைபிடித்து முகத்தில் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளி விட்டு வரிசையில் நின்றவாறு மக்கள் பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.