தஞ்சாவூர் மாவட்டம், திருமாங்குடி பகுதியைச் சேர்ந்தவர் சாதிக் (எ) சாகுல் அமீது (31). இவர் வேலை விஷயமாக வேலூரில் வசித்து வந்துள்ளார். அப்போது காரைக்கால் அடுத்த திருநள்ளாறு பகுதியை சேர்ந்த அப்துல் மஜீத் (43) என்பவரும் அதே பகுதியில் வசித்து வந்துள்ளார். இதனால் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு நண்பர்களாக பழகி வந்துள்ளனர்.
இந்த நிலையில் 2016 ஆம் ஆண்டு அப்துல் அஜித் தனது பைக்கில் சாகுல் அமீதை அழைத்துக் கொண்டு வெளியே சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட விபத்தில் அப்துல் அஜித்துக்கு பலத்த காயம் ஏற்பட்டதோடு பைக்கும் சேதம் அடைந்துள்ளது. இந்த விபத்திற்கான சிகிச்சை மற்றும் பைக் பழுதுப் பார்த்தற்கான செலவு என சுமார் ரூ.1.50 லட்சம் வரை செலவாகி உள்ளது.
எனவே அந்த பணத்தை தருமாறு சாகுல் அமீதிடம் அப்துல் அஜித் கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் அப்துல் அஜித் அடிக்கடி பணம் கேட்டு சாகுல் அமீதுக்கு தொந்தரவு கொடுத்ததாக தெரிகிறது. இதனால் கோபமடைந்த சாகுல் அமீது அப்துல் அஜித்தை தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளார்.
அதன்படி அதே ஆண்டு ஜனவரி 30ஆம் தேதி வேலூர் அடுத்த மேல்மொணவூர் ஏரிப்பகுதிக்கு அப்துல் அஜித்தை சாகுல் அமீது அழைத்துச் சென்று மது வாங்கி கொடுத்துள்ளார். மதுவை குடித்து விட்டு போதையில் இருந்த அப்துல் அஜித்தை மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்து விட்டு, வெளியில் தெரியாமல் இருக்க தீவைத்து எரித்துள்ளார். இதுகுறித்து கிடைத்த தகவலின் அடிப்படையில் விரிஞ்சிபுரம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், சாகுல்அமீது தான் பணத் தகராறில் அப்துல் அஜித்தை குத்தி கொலை செய்தார் என்பது தெரியவந்தது.
இதையடுத்து சாகுல் அமீதை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கு வேலூர் மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சாகுல் அமீதுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.