கர்நாடக மாநிலத்திலிருந்து கோயம்பேட்டிற்கு இஞ்சி லோடு ஏற்றிவந்த லாரி, வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் அருகே சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை பகுதியில் நேற்று வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென லாரி கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் நடுவே இருந்த தடுப்பு கம்பிகளில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதுகுறித்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஆம்பூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், லாரி ஓட்டி வந்தது கேரளா மாநிலத்தை சார்ந்த ஆதி என்பதும், தூக்க கலக்கத்தில் சாலையின் நடுவே இருந்த கம்பிகளில் மோதியதாகவும் தெரியவந்துள்ளது.
இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக எவ்வித உயிரிழப்பும் ஏற்படவில்லை. பின்னர் கிரேன் மூலம் லாரியை அப்புறப்படுத்தி காவல்துறையினர் போக்குவரத்தை சரி செய்தனர். இதனால் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.