வேலூர்: வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த பத்தலப்பல்லி மலைப்பாதை வழியாக ஆந்திரா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்குச் செல்லும் சாலையில் நாள்தோறும் ஏராளமான கனரக வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் வந்து செல்கின்றன. இந்த நிலையில், சில நாட்களுக்கு முன் மலைப்பாதை வழியாக வந்து கொண்டிருந்த வாகன ஓட்டிகள் சிலர், சிறுத்தை சாலையைக் கடந்ததாக காவல் துறையினரிடமும், வனத்துறையினரிடமும் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, மலைப்பாதை வழியாக இரவு நேரங்களில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு காவல்துறையினரும், வனத்துறையினரும் எச்சரிக்கை விடுத்தனர். இந்த நிலையில், ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலத்தில் இருந்து வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி சிறுத்தை ஒன்று உயிரிழந்துள்ளது.
சாலையில் உயிரிழந்த சிறுத்தையைக் கண்ட வாகன ஓட்டிகள், பேரணாம்பட்டு சோதனைச் சாவடியில் இருந்த வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக, அங்கு சென்று பார்த்த பேரணாம்பட்டு வனத்துறையினர், தமிழக எல்லையோரம் ஆந்திரா மற்றும் கர்நாடகா ஆகிய இரு மாநிலங்களுக்குச் செல்லும் சாலையில் இரண்டு வயது பெண் சிறுத்தை ஒன்று உயிரிழந்த நிலையில் கண்டுள்ளனர்.
இதனை அடுத்து, பேரணாம்பட்டு வனத்துறையினர், ஆந்திரா வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆந்திரா வனத்துறையினர் சிறுத்தையை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துவிட்டு, தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சாலையைக் கடக்க முயன்ற சிறுத்தை வாகனம் மோதி உயிரிழந்த சம்பவம் வாகனம் ஓட்டிகள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், ஆந்திர மாநிலத்திலிருந்து காய்கறிகளை ஏற்றி வந்த மினி லாரி ஒன்று மலைப்பாதையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து, வாகனத்தை அப்புறப்படுத்தும் பணியில் பேரணாம்பட்டு போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: வெள்ளையாக இருப்பவரே நடிகராக முடியும் என்ற மனநிலையை உடைத்தவர் 'ரஜினிகாந்த்' - இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்