வேலூர்: குடியாத்தம் அடுத்த டி.பி. பாளையத்தைச் சேர்ந்த வேலு என்பவர் தன்னுடைய நிலத்தை அளந்து தர குடியாத்தம் தாலுகா அலுவலகத்தில் உள்ள முதுநிலை நில அளவையர் விஜய் கிருஷ்ணா (47) என்பவரை அணுகி உள்ளார். அதற்கு 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுத்தால் நிலத்தை அளந்து கொடுப்பதாக விஜய் கிருஷ்ணா கூறியதாக சொல்லப்படுகிறது.
இது குறித்து வேலு, வேலூரில் உள்ள லஞ்ச ஒழிப்பு காவல் துறையில் புகார் அளித்து உள்ளார். லஞ்ச ஒழிப்பு காவல் ஆய்வாளர் விஜய் தலைமையில் போலீசார் தாலுகா அலுவலகத்தில் மறைந்து இருந்து கண்காணித்தனர். இதனைத் தொடர்ந்து 15 ஆயிரம் ரூபாயை வேலு, விஜய் கிருஷ்ணாவிடம் கொடுக்க அவர், தனது உதவியாளர் கலைவாணன் (27) என்பவரிடம் கொடுக்கச் சொன்னார்.
கலைவாணனிடம் லஞ்ச பணத்தை கொடுக்கும் போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்தனர். விசாரணையில் தலைமை நில அளவையர் விஜய் கிருஷ்ணா, உதவியாளர் கலைவாணன் ஆகிய இருவரையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
இது போன்ற லஞ்ச விவகாரம் நீண்ட நாட்களாக நடைபெற்று வருவதாகவும் சம்பந்தப்பட்ட துறைக்கு தகவல் தெரிவித்தும் யாரும் நடவடிக்கை எடுக்க முன் வரவில்லை எனவும் அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். தற்பொழுது லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரியிடம் புகார் அளித்த நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.
புகாரின் பேரில் நில அளவையர் உள்பட இருவரையும் கைது செய்தது பாராட்டுக்குரிய செயல் என்றும் இது மட்டும் இல்லாமல் அரசு அதிகாரிகள் இருவர் மீதும் துறை ரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்களிடையே கோரிக்கை விடுத்து உள்ளனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர், தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ரூ.1.5 கோடி மோசடி வழக்கில் ஹரி நாடாருக்கு போலீஸ் காவல்!