வேலூரில் நேற்று (பிப்.09) பரப்புரை மேற்கொண்ட முதலமைச்சர் பழனிசாமி, "ஆன்மிகத்தில் புகழ் பெற்று பல சமூக சேவைகளில் ஈடுபட்ட திருமுருக கிருபானந்த வாரியாரின் பிறந்த நாளான ஆகஸ்ட் 25ஆம் தேதி அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என தெரிவித்தார்.
கிருபானந்த வாரியார்
கிருபானந்த வாரியார் வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே பாலாற்றங்கரையில் அமைந்த காங்கேய நல்லூர் எனும் கிராமத்தில், மல்லையதாசர் - கனகவல்லி தம்பதிக்கு 1906ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25ஆம் தேதி பிறந்தார்.
எட்டு வயதிலேயே கவி பாடும் ஆற்றல் பெற்ற கிருபானந்த வாரியார், தேவாரம், திருப்புகழ், திருவருட்பா, கந்தபுராணம், கம்பராமாயணம் முதலான நூல்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை மனப்பாடம் செய்தவர். எளிய மக்களுக்கும் புரிந்துகொள்ளும் வகையில் 500-க்கும் மேற்பட்ட நூல்களை இயற்றியுள்ளார். இவரது சொற்பொழிவுகள் மட்டும் 80-க்கும் மேற்பட்ட குறுந்தகடுகளாக வெளிவந்துள்ளன. இவர் ஆற்றிய புராண சொற்பொழிவுகள் மூலம் மக்களை கவர்ந்தார்.
திருமுருக கிருபானந்த வாரியார் ஏறக்குறைய 150 நூல்களைப் படைத்துள்ளார். அருள்மொழி அரசு, திருப்புகழ் ஜோதி, சொற்பொழிவு வள்ளல், கலைமாமணி, ஞானக்கதிரவன் இன்னும் பல அடங்கும்.
ஆன்மிக பணியாற்றுவதையே தவ வாழ்க்கையாக வாழ்ந்த கிருபானந்த வாரியார் 1993ஆம் ஆண்டு நவம்பர் 7 ஆம் தேதி லண்டனில் இருந்து இந்தியா வரும் போது விமானப் பயணத்திலேயே அவர் உயிர் பிரிந்தது. வேலூர் மாவட்டம், காட்பாடிக்கு அருகே கிருபானந்த வாரியாரை சிறப்பிக்கும் வகையில் கோயில் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.