வேலூர்: காட்பாடி அடுத்த சேர்காட்டில் செயல்பட்டு வருகிறது திருவள்ளுவர் அரசு பல்கலைக்கழகம். இதில் கடந்த 2013 முதல் 2016ஆம் ஆண்டு வரை அப்போதைய தேர்வு கட்டுப்பாட்டு அலுவலராக இருந்த அசோகன் என்பவர் 6 பேருக்கு, பல்கலைக்கழகத்தில் பணி செய்து வந்ததாக போலி பணி அனுபவ சான்று அளித்து அதே பல்கலைக்கழகத்திலேயே பணியிலும் சேர்த்துள்ளார்.
இது தொடர்பாக திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் முன்னால் ஆட்சிக்குழு உறுப்பினர் பேராசியர் ஐ.இளங்கோவன் என்பவர் கடந்த 2016ஆம் ஆண்டு வேலூர் மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளார்.அதன் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்த குற்றப்பிரிவு காவலர்கள், உரிய முகாந்திரம் இல்லை என கூறி வழக்கை முடித்து வைத்துள்ளனர்.
இதனையடுத்து இளங்கோவன் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். இந்நிலையில் வழக்கை விசாரித்து வந்த காட்பாடி ஒருங்கிணைந்த நீதிமன்றம் பேராசிரியர் இளங்கோவன் அளித்த புகாரை முழுமையாக விசாரிக்காமல் முடித்து வைத்தது தவறு, அதை மீண்டும் விசாரித்து வழக்கு தொடுக்க வேண்டும் என காட்பாடி குற்றவியல் நீதிமன்றம் மாவட்ட குற்றப்பிரிவுக்கு உத்தரவிட்டது.
புகாருக்குள்ளான முன்னால் பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அசோகன் என்பவர் பணி ஓய்வு பெறும் இறுதி நாளில், இவரும் இவரது மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வேலூர் லஞ்ச ஒழிப்புத்துறையினரால் வழக்கு பதிவு செய்யப்பட்டதையடுத்து அசோகனின் பணி ஓய்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: டிச.7ம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்!