வேலூர் மாநகரில் நடைபெற்றுவரும் சீர்மிகு நகரத் திட்டப் பணிகளுக்கான ஆய்வுக்கூட்டம் இரண்டாவது நாளாக வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (செப். 30) நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வுக்கூட்டத்தில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த், வேலூர் சட்டப்பேரவை உறுப்பினர் கார்த்திகேயன், மாநகராட்சி ஆணையர் சங்கரன், திட்டப் பொறியாளர் சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
சுமார் இரண்டு மணிநேரமாக நடைபெற்ற இந்த ஆய்வுக்கூட்டத்தில், சீர்மிகு நகரம் திட்டத்தின்கீழ் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் திட்டப்பணிகள் குறித்தும், எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய திட்டப்பணிகள் குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டன.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கதிர் ஆனந்த், "பேருந்து நிலையத்தை இடித்து அகற்றப்பட்ட கட்டடக் கழிவுகள் பாலாற்றின் மையப் பகுதியில் கொட்டப்பட்டுள்ளதை கடுமையாக கண்டிக்கிறோம்.
ஒரு வாரத்திற்குள் கழிவுகள் அனைத்தும் அகற்றப்படவில்லை என்றால் போராட்டம் நடத்துவோம். அதேபோல் பாலாற்றில் குப்பைகள் கொட்டுபவர்கள் மீதும் மாநகராட்சி நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தினார்.
தொடர்ந்து பேசிய அவர், “காட்பாடி ரயில்வே மேம்பாலத்தை உறுதிப்படுத்தி, பராமரிக்கும் பணிகள் நவம்பர் 2ஆம் தேதிக்குள் முடிவடையும். சீர்மிகு நகரம் திட்டத்தின்கீழ் தற்போது எல்.இ.டி. தெரு விளக்குகள் அமைக்கப்பட்டுவருகின்றன.
ஏற்கனவே எல்.இ.டி. பல்புகளைப் பராமரிப்பதற்காக ஒப்பந்தம் 10 கோடி ரூபாய்க்கு போடப்பட்டு பணிகள் நடைபெற்றுவரும் நிலையில் மேலும் 30 கோடி ரூபாய்க்கு புதிதாக எல்.இ.டி. விளக்குகளை வாங்கியுள்ளனர்.
இதில் ஊழல் நடைபெற்றுள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது. எனவே இது குறித்து விரிவான அறிக்கையினை மாவட்ட நிர்வாகத்திடம் கேட்டுள்ளோம். அடுத்த கண்காணிப்பு கூட்டத்தினை ஜனவரி மாதம் நடத்த வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க: ’மருத்துவக்கழிவு மேலாண்மையை மேம்படுத்த வேண்டியது அவசியம்’