வேலூர்: தோட்டப்பாளையம் தர்மராஜா கோயில் அருகில் அமைந்துள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகைக் கடையில் கடந்த 15ஆம் தேதி சுமார் 15 கிலோ மதிப்பிலான தங்கம், வைர நகைகளை ஒருவர் கொள்ளையடித்துச் சென்றார்.
இது குறித்து வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன், வேலூர் சரக டிஐஜி ஏ.ஜி. பாபு, வேலூர் உள்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் ஆகியோர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். கடந்த டிசம்பர் 16ஆம் தேதி மாலை வடக்கு மண்டல காவல் துறைத் தலைவர் (ஐஜி) சந்தோஷ் குமார், சம்பவ இடத்தில் நேரில் ஆய்வுமேற்கொண்டார்.
குற்றவாளி கைது
இந்நிலையில் குற்றவாளி டீக்காராமன் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, சுடுகாட்டில் புதைக்கப்பட்ட நகைகள் மீட்கப்பட்டன.
இன்று (டிசம்பர் 21) பிற்பகல் வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள நீதித்துறை நடுவர் எண். 4-ல் நீதிபதி ரோஸ் கலா முன்பு டீக்காராமன் முன்னிறுத்தப்பட்டார். அப்போது அவர், "என்னைக் கைது செய்தது என் பெற்றோருக்குத் தெரியும், இருப்பினும் எனக்கு அவர்களது துணை இல்லை. என்னை பிணையில் எடுக்க யாரும் வரமாட்டார்கள். எப்போது என்னை வெளியே விடுவீர்கள்" என நீதிபதியிடம் கேட்டார்.
காயம் குறித்து நீதிபதி கேள்வி
இதனையடுத்து, கொள்ளையனுக்கு பிணை தொடர்பாக உதவி செய்ய இலவச சட்ட உதவி மையத்திற்கு நீதிபதி பரிந்துரை செய்தார். மேலும், கை, கால்களில் ஏற்பட்டுள்ள காயம் குறித்து நீதிபதி காவல் துறையினரிடம் கேட்டார். அதற்கு காவல் துறையினர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட போது தவறி விழுந்ததில் காயம் ஏற்பட்டுள்ளதாக விளக்கம் அளித்தனர்.
இறுதியாக வழக்கை விசாரித்த நீதிபதி டீக்காராமனை 15 நாள்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பித்தார். மேலும் விசாரணையை 2022 ஜனவரி 4ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார். இதைத் தொடர்ந்து டீக்காராமன் தொரப்பாடியில் உள்ள வேலூர் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையும் படிங்க: ஜோஸ் ஆலுக்காஸில் கொள்ளையடித்தவர் கைது