வேலூர்: த.செ. ஞானவேல் இயக்கத்தில் 2டி என்டர்டெயின்மென்ட் (2D Entertainment) தயாரிப்பில் சூர்யா (Suriya) நடித்துள்ள படம் 'ஜெய் பீம்' (Jai Bhim). தீபாவளி விடுமுறையை முன்னிட்டு இம்மாதம் 2ஆம் தேதி வெளியான இப்படத்தில் ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
அதிகாரத்தை எதிர்த்து சட்டப் போராட்டம் மூலம் நீதி எவ்வாறு நிலைநாட்டப்பட்டது என்பது குறித்தும், பழங்குடியின மக்கள் சந்திக்கும் பிரச்சினை குறித்தும் ஜெய் பீம் திரைப்படத்தில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. படத்தைப் பார்த்த அரசியல் கட்சியினர், திரையுலகினர் பலரும் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் வன்னியர் சமுதாயத்தை அவமதிக்கும்விதமான காட்சிகள் (Jai Bhim Controversy) படத்தில் இருப்பதாகக் கூறி பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் சமீபத்தில் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
மேலும் இந்த விவகாரம் தொடர்பாக 'ஜெய் பீம்' படக்குழுவினர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், ஐந்து கோடி ரூபாய் இழப்பீடு தர வேண்டும் எனவும் வன்னியர் சங்கம் சார்பில் சூர்யாவுக்கு நோட்டீஸ் (Vanniyar Sangam issues legal notice to Jai Bhim makers) அனுப்பப்பட்டது.
இதன் ஒரு பகுதியாக நேற்று (நவம்பர் 16) வேலூர் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த வன்னியர் சங்கத்தினர், ஜெய் பீம் திரைப்படத்தைத் தயாரித்த 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் மீதும் அப்படத்தின் இயக்குநர் ஞானவேல், நடிகர் சூர்யா மீதும், குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அப்புகார் மனுவில், “சாதிப் பிரிவினையை ஏற்படுத்தும் வகையில், வன்னியர் சமுகத்தை இழிப்படுத்தும் நோக்கத்தில் 'ஜெய் பீம்' திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. படம் எடுத்த 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம், தயாரிப்பாளர்கள் சூர்யா, ஜோதிகா மற்றும் இயக்குநர் ஞானவேல் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து கைதுசெய்ய வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: 'ஜெய்பீம்' படக்குழுவினருடன் எப்போதும் நான்.. இயக்குநர் அமீர்