வேலூர்: 750 சுற்றுலாப் பயணிகளுடன் ஜூலை 1 ஆம் தேதியிலிருந்து 12 நாட்களுக்கு கேரள மாநிலம் கொச்சுவேலியிலிருந்து, ஸ்ரீ மாதா வைஷ்ணவ் தேவி யாத்திரை என்ற பாரத் கவுரவ் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக, இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழக (IRCTC) தென்மண்டல பொது மேலாளர் ரவிக்குமார், காட்பாடியில் அளித்த பேட்டியில் குறிப்பிட்டு உள்ளார்.
வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில் நிலையத்தில் இன்று ( ஜூன் 20ஆம் தேதி), செய்தியாளர்களை சந்தித்த இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழக தென்மண்டல பொது மேலாளர் ரவிக்குமார் அளித்த பேட்டியில் கூறி உள்ளதாவது, இந்தியன் ரயில்வேயின் உணவு மற்றும் சுற்றுலா கழகம் (IRCTC) சார்பில், சுற்றுலா பயணிகளுக்காக பிரத்யேக பாரத் கௌரவ் சுற்றுலா யாத்திரை ரயில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
14 பெட்டிகள் உள்ள இந்த சிறப்பு சுற்றுலா ரயிலில் 3 குளிர்சாதன பெட்டிகள், 8 ஸ்லீப்பர் பெட்டிகள், 1 பேண்ட்ரி கார், 2 பவர் கார்கள் என மொத்தம் 14 பெட்டிகள் உள்ளன. ஜூலை 1 ஆம் தேதி, கொச்சுவேலியிலிருந்து தொடங்கும் இந்த ரயில் 11 இரவுகள் மற்றும் 12 நாட்கள் என திட்டமிடப்பட்டு உள்ளது.
கேரள மாநிலம் கொச்சுவேலியில் இருந்து நாகர்கோவில், திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, சிதம்பரம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் மற்றும் சென்னை எழும்பூர், வழியாக சுற்றுலாப் பயணிகளை அழைத்துக் கொண்டு,
ஹைதராபாத், ஆக்ரா, மதுரா வைஷ்ணவ தேவி(கட்ரா), அமிர்தசரஸ், டெல்லி ஆகிய இடங்களை பார்வையிட்டு அங்குள்ள முக்கிய சுற்றுலா மற்றும் சமய ஸ்தலங்களை பார்வையிட்டு வர ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.
இதற்கான பயணக்கட்டனமாக நபர் ஒருவருக்கு ஸ்லீப்பர் வகுப்பு ரூபாய் 22ஆயிரத்து 350 ரூபாயும், குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிக்கு, ரூபாய் 40 ஆயிரத்து 380 எனவும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. உள்ளூர் இடங்களை பார்வையிடுவதற்கான போக்குவரத்து மற்றும் ரயில் பயணத்தின் போது தென்னிந்திய சைவ உணவு, மற்றும் சுற்றுலா மேலாளர் மற்றும் தனியார் பாதுகாவலர் வசதியுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ரூபாய் 10 லட்சம் வரை பயணக் காப்புறுதியும் அடங்கியுள்ளது. ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும், ஒவ்வொரு மாதமும் இந்த சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று கூறினார். வருங்காலத்தில் காட்பாடி ரயில் நிலையத்தில் இந்த சிறப்பு ரயில் நின்று செல்வதற்கான நடவடிக்கையை எடுக்கப்படும் என்றார்.
ஜூலை ஒன்றாம் தேதியிலிருந்து கொச்சியில் இருந்து துவங்கும் இந்த சிறப்பு ரயிலில் இதுவரை 550 பேர் முன்பதிவு செய்துள்ளனர். மத்திய, மாநில மற்றும் அரசு பொதுத்துறை நிறுவனங்களின் ஊழியர்கள் இந்த சுற்றுலா ரயிலில் பயணித்தால், LTC சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளும் வசதியும் செய்யப்பட்டு உள்ளதாக அவர் மேலும் தெரிவித்து உள்ளார்.
இதையும் படிங்க: Benefits of Black Pepper : முதுமையை தடுக்கும் மிளகு!