வேலூர்: கடந்த 1971ஆம் ஆண்டு நடந்த இந்தியா - பாகிஸ்தான் போரில் இந்தியா வெற்றி பெற்றது. அந்த போரில் பங்கேற்ற பீரங்கி படையின் 195-வது ரெஜிமென்ட் பிரிவைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர்கள் இந்த வெற்றியைக் கொண்டாடினர். தற்போது 52வது ஆண்டான இன்று (டிச.3) வேலூரில் சிப்பாய் புரட்சி நினைவு தூணிலிருந்து, கொட்டும் மழையில் தொடர் ஜோதி ஏற்றி சுமார் 14 கிலோ மீட்டர் தொடர் ஓட்டமாகச் சென்றனர். இதில் பீரங்கிப் படையில் இடம் பெற்ற தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகம், கேரளம், புதுச்சேரி ஆகிய தென்மாநிலங்களைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் பங்கேற்றனர்.
1971 இந்திய - பாகிஸ்தான் போர்: இந்தியப் பிரிவினையின்போது 1970ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் முஜிபுர்ரகுமானின் அவாமிலீக் கட்சி பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றியது. அதை ஏற்காத பாகிஸ்தான் ஆட்சியாளர்களும், ராணுவமும் அடக்குமுறையைக் கையாண்டனர். இதனால் 1971ஆம் ஆண்டு ஏற்பட்ட உள்நாட்டுப் போரில் இந்தியாவும் ஈடுபட வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாக்கப்பட்டது.
இந்த போரின் முடிவில் 90 ஆயிரம் வீரர்களுடன் பாகிஸ்தான் ராணுவம் இந்திய ராணுவத்திடம் சரணடைந்தது. மேலும் போரின் முடிவில் வங்கதேசம் என்ற தனிநாடு உருவானது. டிசம்பர் 3ஆம் தேதி தொடங்கி 8 நாட்கள் நடந்த இந்த போரில், காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதியில் நடந்த போரில் இந்திய ராணுவத்தின் 195வது ரெஜிமென்ட் பீரங்கிப்படையின் பங்களிப்பு பெரிதாகக் கருதப்பட்டது.
இப்பீரங்கிப் படையில் இடம்பெற்ற தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகம், கேரளம், புதுச்சேரி ஆகிய தென்மாநிலங்களைச் சேர்ந்த ராணுவ வீரர்களில் தற்போது உயிருடன் உள்ள 80 பேர், 52 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்திய விடுதலைப்போருக்கு வித்திட்ட வேலூர் கோட்டையில் தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் நேரில் சந்தித்துக் கொண்டனர்.
போரின் வெற்றி தினத்தைக் கொண்டாடும் வகையில், இன்று வேலூர் சிப்பாய் புரட்சி நினைவுத் தூணுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதைத் தொடர்ந்து ஜோதியை ஏந்தியபடி தொடர் ஓட்டமாக சுமார் 14 கிலோ மீட்டர் தொலைவில் ராணுவ வீரர்கள் அதிகமாக உள்ள கரசமங்கலம் என்ற பகுதி வரை சென்றனர்.
மேலும், இந்நிகழ்ச்சியில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் புதுக்கோட்டையைச் சேர்ந்த ராணுவ வீரர் கோவிந்தராஜ், கேரளாவைச் சேர்ந்த ராணுவ வீரர் குரியன், மாநகராட்சி டீட்டா சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: புயல் எதிரொலி: சென்னையில் 7 விமானங்கள் சேவை ரத்து... எந்தெந்த விமானம் தெரியுமா?