வேலூர்: தமிழ்நாட்டில் டெங்கு பாதிப்பு பரவலாக அதிகரித்து வரும் நிலையில், பாதிப்பை கட்டுப்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது. தற்போது ராணிப்பேட்டை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலின் பரவல் அதிகரித்து வரும் சூழலில், வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் நோயாளிகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகின்றனர்.
இதனால் மருத்துவமனையில் படுக்கை வசதிகளுக்கான தட்டுபாடு ஏற்படும் சூழல் உருவாகி உள்ளதாக கூறப்படுகிறது. சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் அவதிக்குள்ளாகதபடி, கூடுதல் படுக்கை வசதிகளை ஏற்படுத்தும் பணியில் மருத்துவமனை நிர்வாகத்தினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்றைய (அக். 21) நிலவரப்படி 10 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதார நிறுவனம் தகவல் தெரிவித்து உள்ளது. டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களில் 8 பேர் அரசு மருத்துவமனையிலும், இருவர் தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிகப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்ட மண்டலங்களான ராணிப்பேட்டை, அரக்கோணம், சின்னதக்கை, வி.சி.மோட்டூர், கீழ்புதுப்பேட்டை, திமிரி ஆகிய பகுதிகளில் கொசு மருந்து தெளிக்கும் பணியில் சுகாதாரத்துறை ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் காய்ச்சலால் பாதித்த நோயாளிகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.
தற்போது மருத்துவமனையில் 45 உள்நோயாளிகள் சிகிச்சை பெற்று வருவதாகவும், கூடுதல் படுக்கை வசதிகளை ஏற்படுத்தும் பணியில் மருத்துவமனை நிர்வாகத்தினர் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: 83 எம்பிபிஎஸ் இடங்கள் காலி; செப்.30-க்குப் பிறகான மாணவர் சேர்க்கை செல்லாது - தேசிய மருத்துவ ஆணையம் உத்தரவு!