வேலூர்: தமிழ்நாட்டிற்கு வெளிமாநிலங்களில் இருந்து கஞ்சா மற்றும் செம்மரக்கட்டைகள் உட்பட சட்டவிரோதப் பொருட்கள் கடத்தப்படுவது அதிகரித்து வருகிறது. குறிப்பாக, ஆந்திர மாநிலத்தில் இருந்து கஞ்சா கடத்தல் பெருமளவில் நடந்துகொண்டு வருகிறது. இதனால், ஆந்திர மாநில எல்லைப்பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், ஆந்திர மாநிலத்தில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும், தீவிர சோதனைக்குட்படுத்தப்பட்டு வருகிறது.
இதில் கடத்தல் செம்மரம், கஞ்சா போன்ற பொருட்கள் பெருமளவில் போலீசாரால் கைப்பற்றப்பட்டும் வருகிறது. இந்நிலையில், நேற்று இரவு(மார்ச் 25) 11 மணியளவில், காட்பாடி அருகே உள்ள ஆந்திர மாநில எல்லையான கிருஸ்டியான்பேட்டை செக்போஸ்ட் பகுதியில், வேலூர் டிஐஜி முத்துசாமி மற்றும் எஸ்.பி. ராஜேஸ்கண்ணன் தலைமையில் போலீசார் திடீர் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சோதனைச் சாவடிகளில் இருந்து, தடுப்பான்களில் போதுமான அளவுக்கு ஔிரும் பட்டைகள் (ரிப்ளெக்டிங் ஸ்டிக்கர்) ஒட்டப்பட்டுள்ளதா? என்றும், அங்குள்ள சிசிடிவி கேமராக்கள் முறையாக செயல்படுகிறதா? என்றும் ஆய்வு நடத்தினார். மேலும், டிஐஜி முத்துசாமி சோதனைச் சாவடி அமைந்துள்ள இடத்தில் சாலையை மேலும் விரிவுபடுத்துவது குறித்தும், வாகனங்களை சோதிக்க வசதியான இடவசதிகளை ஏற்படுத்துவது குறித்தும் எஸ்.பி.யிடம் கலந்தாலோசித்தார்.
பிறகு, சாலையோரங்களில் ஆதரவின்றி படுத்துக் கிடந்தவர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு, அவர்கள் உண்மையில் ஆதரவில்லாதவர்களா? என்று உறுதி செய்து, அவர்களை காப்பகத்துக்கு அனுப்புவது, அவர்களுடைய முழுவிவரங்களை சேகரித்து வைப்பது போன்ற ஆலோசனைகளையும் வழங்கினார்.மேலும் இது குறித்து, காட்பாடி எல்லையோரப் பகுதியில் நடந்து வரும் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகள் குறித்து காட்பாடி போலீஸ் ஸ்டேஷனில் ஆய்வும் மேற்கொண்டனர்.