வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஏ.சி சண்முகத்தை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கே.வி குப்பம் பகுதியில் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், ”தமிழ்நாடு முழுவதும் 1511 ஏரிகள் தூர்வாரப்பட்டுள்ளன. அதேபோல் வாய்க்கால், கண்மாய்கள் அனைத்தும் குடிமராமத்து பணிகள் மூலம் சீரமைக்கப்பட்டுள்ளன. நூறு நாட்கள் திட்டம் எக்காரணத்தைக் கொண்டும் கைவிடப்படாது.
வேலூர் மக்களவைத் தேர்தலில் எங்களின் சதி திட்டத்தால்தான் தேர்தல் ரத்து செய்யப்பட்டதாக ஸ்டாலின் பொய்யான பரப்புரை செய்துவருகிறார். அவருக்கு ஒரு சாதரண விவசாயி முதலமைச்சரானதை பொறுத்துக் கொள்ள முடியவில்லை. யார் என்ன சதி செய்தாலும் மக்களுக்கு அதிமுக நல்லது செய்வதை தடுக்கமுடியாது. மேலும் நான் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவன் என்பதால்தான் விவசாயிகளுக்கு என்ன கொடுக்க வேண்டும் என்பதை அறிந்து இலவச கோழிக்குஞ்சு, மாடு, ஆடு உள்ளிட்டவற்றை வழங்குகிறேன். அதேபோல் மேட்டூர் அணையில் எடுக்கப்படும் வண்டல் மண் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது” என்றார்.