வேலூர் மாவட்டம் காட்பாடியில் தமிழ்நாடு அரசு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திற்காக தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.16.45 கோடி மதிப்பில் புதிய விளையாட்டரங்கம் அமைக்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. இதனை மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம், திமுக பொருளாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவருமான துரைமுருகன், மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த துரைமுருகன், ”சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்ட பல்வேறு அறிவிப்புகள் செயல்படுத்தப்படவில்லை. அதுபோன்று டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்திருப்பதை விட்டுவிடாமல் இருந்தால் நல்லது.
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு பின்னடைவு என்பது வழக்கமான ஒன்றுதான். மக்களவைத் தேர்தலில் மட்டும் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்றது. அதன் பின்னர் நடைபெற்ற அனைத்து மாநில தேர்தல்களிலும் அவர்களுக்கு பின்னடைவே ஏற்பட்டுள்ளது. நாட்டில் இந்துத்துவாவை நுழைக்க பாஜக முயற்சி செய்வதால்தான் டெல்லி தேர்தலிலும் அவர்கள் தோல்வியை தழுவியுள்ளனர்.
இட ஒதுக்கீடு பாதிக்கப்படாமல் இருக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன். அத்திக்காயை பிளந்தால் சொத்தை போல் டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் நடந்துள்ள ஊழல்கள் ஒவ்வொன்றாக வெளிவரத் தொடங்கியுள்ளன” என்றார்.
இதையும் படிங்க: ஓ.பி. ரவீந்திரநாத்துக்கு மத்திய அமைச்சர் பதவியா?