தமிழ்நாட்டில் கடந்த இரண்டு மாத காலமாக வெயில் வாட்டிவதைத்துவருகிறது. வேலூரில் வெயில் காலத்தில் அதிகளவில் வெப்பம் நிலவும். தற்போதைய சூழ்நிலையில் இங்கு அதிகபட்சமாக 111 டிகிரி வெயில் பதிவாகி வருகிறது. இதனால் இம்மாவட்ட மக்கள் வெயிலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் வெளியே செல்ல முடியாமல் தவித்துவருகின்றனர். மேலும், அனல் காற்று வீசுவதால் வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகிவருகின்றனர்.
இந்நிலையில், நேற்று 110 டிகிரி வெயில் பதிவாகி இருந்த நிலையில், இரவு 9 மணியளவில் திடீரென இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. வேலூர், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அரை மணி நேரம் பலத்த மழை பெய்தது.
இன்னும் சில இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்தது. இதனைக் கையில் எடுத்து குழந்தைகள் விளையாடினர். இதனால் வெப்பம் சற்று தணிந்து குளிர்ச்சி நிலவியதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். மேலும், தொடர்ந்த மழை நீடிக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.