வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் பள்ளிகொண்டா காவல்துறையினர் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக வந்த வேனை நிறுத்தி சோதனை செய்தனர். பின் வேனில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். ஆனால் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததினால் வேனை முழுமையாக சோதனையிட்டனர்.
அப்போது வேனில் இருந்த பெட்டிகளில் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருப்பது தெரியவந்தது. அதன் பின்னர் வேனில் 25 பெட்டிகளில் கடத்திவரப்பட்ட சுமார் ரூ. 1 லட்சத்திற்கு மேல் மதிப்புள்ள குட்கா பொருட்களையும், வேனையும் பள்ளிகொண்டா காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில், ராஜஸ்தானை பூர்வீகமாக கொண்ட பெங்களூருவை சேர்ந்த பரலேஷ்குமார் (23), கிருஷ்ணகிரியை சேர்ந்த சதீஷ் (22) ஆகியோரை கைது செய்தனர். மேலும், வேனில் கடத்திவரப்பட்ட குட்கா பொருட்கள் மொத்தமாக வட மாநிலங்களில் இருந்து பெங்களூரு கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து சில்லறையாக மற்ற பகுதிகளுக்கு கடத்தப்படுவது தெரியவந்தது. இதுகுறித்து காவல்துறையினர் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: லஞ்சம் வாங்கிய மாநகராட்சி அலுவலர் அதிரடி கைது!