வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட 2ஆவது மண்டல சுகாதார மேற்பார்வையாளராக பணியாற்றி வருபவர் (பொறுப்பு) சிவக்குமார். இவர், நேற்று (ஜூலை 7) மாலை மாநகராட்சிக்குட்பட்ட 2ஆவது மண்டலத்தில் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க சென்றார்.
கூத்தா மாணிக்கம் தெரு வழியாக சென்றபோது, அப்பகுதியில் உள்ள RZ என்ற மளிகைக் கடை தகுந்த இடைவெளியின்றி இருந்ததால், கடையை மூட வலியுறுத்தியுள்ளார். இதற்கு, அந்த கடையின் உரிமையாளர் யூனிஸ் (எ) ரஃபீக், அவரது மகன் மற்றும் ஊழியர்களை வைத்து மாநகராட்சி சுகாதார மேற்பார்வையாளர் சிவக்குமாரை தாக்க முற்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும், மேற்பார்வையாளர் சிவக்குமார் கடை உரிமையாளரிடம் 5ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றுக் கொண்டதாக தெரிகிறது. இந்நிலையில், சிவக்குமார் அவதூறாக பேசிய வீடியோவை பரப்பியதாகவும், கரோனா பணி செய்யவிடாமல் தடுத்ததாகவும் RZ மளிகைக் கடை உரிமையாளர் ரஃபீக் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அலுவலர் மதிவாணன் வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதனடிப்படையில், வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் கடை உரிமையாளர் ரஃபீக்கிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சுகாதார மேற்பார்வையாளர் சிவக்குமாருடன் கடை உரிமையாளர் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வீடியோ எடுத்தவரின் செல்போனை பறித்த வட்டாட்சியர் - வாக்குவாதத்தில் ஈடுபட்ட மக்கள்