வேலூர்: உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீபுரம் தங்கக்கோயில் வேலூர் நகரத்தில் மாலைக்கொடி எனும் இடத்தில் அமைந்துள்ளது. மஹாலட்சுமிக்காக எழுப்பப்பட்டிருக்கும் இந்த கோயில் முழுவதும் தங்க முலாம் பூசப்பட்டு காட்சியளிக்கிறது. தங்ககோவில் ஸ்ரீநாராயணி வளாகத்தில், 2021ஆம் ஆண்டு 1,700 கிலோ வெள்ளியால் செய்யப்பட்ட ஸ்ரீ சக்தி கணபதி விக்ரகம் வடிவமைக்கப்பட்டு கோயிலில் வைத்து வழிபாடு நடந்து வருகிறது.
ஸ்ரீ சக்தி கணபதிக்கு உலகிலேயே மிகப்பெரிய 880 கேரட் எடை அளவு கொண்ட ஒரே கல்லாலான வைடூரிய கல்லை தங்க கிரீடத்தில் வடிவமைத்து வைத்து இன்று (ஜூலை 28) கோயிலின் நிறுவனர் சக்தியம்மா, ஸ்ரீ சக்தி கணபதிக்கு கிரீடத்தை சூட்டி வழிபாடு செய்தார்.
இதன் மதிப்பு சுமார் ரூ.8 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. நவகிரகங்களின் அம்சமான நவரத்தினங்களின் ஒன்றான வைடூரியம் கேது பகவானின் சக்தியை வெளிப்படுத்துவதாக கருதப்படுகிறது. இதனால் மக்களுக்கு தோஷங்கள் நீங்கி மன அமைதி ஏற்பட்டு மக்கள் ஆரோக்கியத்துடன் வாழ இந்த வழிபாட்டு முறை மக்களுக்கு செய்யப்பட்டுள்ளது என கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
தங்க கோயிலின் சிறப்பம்சம்: நட்சத்திர வடிவில் அமைக்கப்பட்டுள்ள இந்த கோயில் முழுவதும் தங்க நிறத்தில் ஜொலிக்க காரணமாக திருப்பதி திருமலை தேவஸ்தானத்திலிருந்து வரவழைக்கப்பட்ட கொல்லர்கள் மூலம் கோயிலின் மைய கோபுரம் தங்கத்தால் செய்யப்பட்டுள்ளது.
மேலும், இந்த கோயிலைக் கட்ட 600 கோடி ரூபாய் செலவானதாக கூறப்படுகிறது. 1,500 கிலோ தங்கம் பயன்படுத்தப்பட்டது என்றும், 55,000 சதுர அடி பரப்பளவுக்கு தங்கக்கோயில் கட்டப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.
தங்கக் கோயிலைச் சுற்றி 10 அடி அகலத்திற்கு தண்ணீர் நிரப்பப்பட்டுள்ளது. கோயிலுக்குள் நுழைந்தவுடன் ஒரு தனி மண்டபமும், அதன் எதிரே செயற்கை நீர் ஊற்றுக்களும் உள்ளது. அதுமட்டுமல்லாமல், மண்டபத்தின் பின்னால் மனிதனின் 18 வகையான குணங்களைத் தாண்டி இறைவனிடம் செல்வதை உணர்த்தும் வகையில் 18 நுழைவு வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஸ்ரீசக்கரத்தில் உள்ள நட்சத்திர அமைப்பில் இந்த லட்சுமிநாராயணி கோயில் உள்ளது. அந்த நட்சத்திரத்தின் நடுவில் வட்ட வடிவில் கோயில் உள்ளது. மேலே இருந்து கோயிலை பார்த்தால் ஸ்ரீசக்கரம் போன்றே தெரியும்படி கோயிலை அமைத்துள்ளனர். இந்த அம்மன் எதிரே 27 அடி உயரத்தில் ஐம்பொன்னாலான 10 அடுக்கு கொண்ட ஆயிரம் திரிகள் ஏற்றக்கூடிய விளக்கு உள்ளது.
கோயிலைச் சுற்றிலும் புல்வெளியும், அதன் நடுவே சுதையால் ஆன துர்க்கையும், லட்சுமியும், சரஸ்வதியும், மாரியம்மன் சிலைகளும் அமைக்கப்பட்டுள்ளன. கோயிலுக்குள்ளே செயற்கையான மலைகளும், குளங்களும், நீர்வீழ்ச்சிகளும் அழகாக அமைக்கப்பட்டுள்ளன. நவீன விளக்குகள், பழங்கால மாட கல் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இவைகள் இரவை பகல்போல மாற்றுகின்றன. கோயிலுக்குள்ளே ஏராளமான மரங்கள் பச்சைப்பசேல் என்று காட்சியளிக்கின்றன.
இதையும் படிங்க: 'தமிழ்நாட்டில் புதியதாக 11 செவிலியர் கல்லூரிகளுக்கு மத்திய அரசு அனுமதி' - அமைச்சர் மா.சுப்பிரமணியன்