மருத்துவ படிப்பு படிக்காமலேயே போலியாகப் பலர் மருத்துவமனை நடத்துவதாகச் சுகாதாரத் துறைக்குத் தொடர்ந்து புகார்கள் வந்தன. இதையடுத்து வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ் குமார் மற்றும் மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநர் யாஷ்மின் ஆகியோர் அடங்கிய குழுவினர் மாவட்டம் முழுவதும் போலி மருத்துவர்கள் தொடர்பாக திடீர் சோதனை மேற்கொண்டுவருகின்றர். அதன்படி திம்மாம்பேட்டை, வாணியம்பாடி வாலாஜா, ராணிப்பேட்டை உள்பட 50 இடங்களில் சோதனை நடைபெற்றுவருகிறது.
இதுகுறித்து மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநர் யாஸ்மினை தொடர்புகொண்டபோது அவர் கூறுகையில், "மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தலைமையில் மாவட்டம் முழுவதும் 35 குழுக்களாக 50 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. இந்த குழுவினர் சம்மந்தப்பட்ட மருத்துவமனைக்கு நேரில் சென்று மருத்துவர்களிடம் எம்பிபிஎஸ் படித்ததற்கான சான்றிதழ்கள் இருக்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்கின்றனர்" என்றார்.
மேலும், "சான்றிதழ் இல்லாதபட்சத்தில் சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டுவருகின்றனர்.. அதன்படி தற்போதுவரை பத்துக்கும் மேற்பட்ட போலி மருத்துவர்கள் வேலூர் மாவட்டம் முழுவதும் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து சோதனை நடைபெற்றுவருகிறது. இன்று மாலை 6 மணி வரை இந்த சோதனை நீடிக்கும்" என்று தெரிவித்தார்