வேலூர்: தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பாக சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் சனாதன ஒழிப்பு மாநாடு (செப். 2) நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற உதயநிதி ஸ்டாலின் சனாதனம் என்பது எதிர்க்கப்பட வேண்டியது அல்லது டெங்கு கொரோனாவைப் போல் ஒழிக்கப்பட வேண்டியது எனப் பேசினார்.
அதைத் தொடர்ந்து, அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் சனாதனம் குறித்த கருத்து நாடு முழுவதும் பரவி பெரும் சர்ச்சையைக் கிளப்பி உள்ளது. இந்நிலையில், அதனை கண்டித்து வட மாநிலம் மற்றும் புதுச்சேரி பகுதியில் உதயநிதி ஸ்டாலின் புகைப்படம் மற்றும் உருவ பொம்மை எரிப்பு போராட்டம் நடைபெற்றது. மேலும் பல்வேறு அரசியல் கட்சிகள் குறிப்பாக பாஜகவினரும், இந்து அமைப்புகளும் தொடர்ந்து கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் அயோத்தி, தபஸ்வி கன்டோன்மென்ட்டைச் சேர்ந்த ஜகத்குரு பரமன் ஆச்சார்யா, "டெங்கு, மலேரியா போன்று சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று திமுக தலைவரின் மகன் என்ன தைரியத்தில் கூறியிருக்கிறார்?" எனக் கேள்வி எழுப்பி, அவரது கருத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், உதயநிதி ஸ்டாலினின் போஸ்டர்களை கிழித்து, தீயை வைத்து எரித்துள்ளார்.
தொடர்ந்து, உதயநிதியின் தலைக்கு ரூ.10 கோடி பரிசுத் தொகை வழங்குவதாகவும், யாராலும் அப்படி உதயநிதியின் தலையை வெட்ட முடியவில்லை என்றால் தானே அதைச் செய்வதாகவும் அறிவித்தார். இது திமுகவினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து அந்த சாமியாரை கண்டிக்கும் வகையில் வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில், நகர உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்ற தலைவர் குகன் மற்றும் நகர மன்ற தலைவர் சௌந்தரராஜன் தலைமையில் சாமியாரின் உருவ பொம்மைக்கு செருப்பு மாலை அணிவித்தும், தீயிட்டுக் கொளுத்தியும் திமுக கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் கண்டன கோஷங்களை எழுப்பி தங்கள் எதிர்ப்பினைத் தெரிவித்தனர். இதனால் குடியாத்தம் புதிய பேருந்து நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: "உதயநிதி தலைக்கு பரிசு என்பது வேடிக்கைப் பேச்சு... ராமநாதபுரத்தில் திமுகவுக்கு ஆதரவு இல்லை" - சீமான் அடுத்தடுத்து அதிரடி!