வேலூர்: கே.வி.குப்பம் அடுத்த பி.கே.புரத்தில் திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்,டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக திமுக பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் கலந்து கொண்டார். மேலும் வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் மற்றும் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் துரைமுருகன், “தேர்தல் நேரத்தில் கொடுத்த அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட்டு வருகிறது. வாக்குறுதிகளை நிறைவேற்ற ஐந்து ஆண்டு காலம் அவகாசம் உள்ளது. நிதி நிலைமையை கருத்தில் கொண்டு திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது.
குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்க முதலமைச்சர் திட்டம் தீட்டி வருகிறார். இந்தியாவிலேயே சிறிய வயதில் முதலமைச்சரான ஸ்டாலினை, வயது முதிர்ந்த முதலமைச்சர்களும் மரியாதை செலுத்தும் அளவில் மரியாதை பெற்றுள்ளார்” என்றார்.
இதனையடுத்து மேடையில் இருந்து இறங்கிய அமைச்சர் துரைமுருகன், மேடைப் படிகளில் இறங்கும்போது கால் தடுமாறி கீழே விழ பார்த்தார். உடனடியாக பின்னால் இருந்த எம்.பியும் அவரது மகனுமான கதிர் ஆனந்த் மற்றும் பாதுகாவலர்கள் அவரை தாங்கி பிடித்தனர். பின்னர் சமநிலைக்கு வந்த அமைச்சர் துரைமுருகன் காரில் புறப்பட்டுச் சென்றார். இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: ஆளுநர் முடிவைப் பொறுத்து எங்க முடிவு - துரைமுருகன் அதிரடி