வேலூர் காட்பாடி அடுத்த தாராபடவேட்டில் திமுக சார்பில் மக்கள் சபை கூட்டம் நடைப்பெற்றது. திமுக பொதுசெயலாளர் துரைமுருகன் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது.
இதன் பின்னர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது முதலமைச்சர் பழனிசாமி, திமுக வேலை கையில் எடுத்து பக்தி நாடகம் ஆடுகிறது எனும் குற்றச்சாட்டு குறித்து கேட்டபோது, "நாங்கள் வேலை கையில் எடுத்தால் சூரசம்ஹாரம் நடந்தே தீரும். நாங்கள் பகுத்தறிவு வாதிகள் என்றாலும் பகுத்தறிவுவாதிக்கு பக்தி கூடாது என எப்போது சொல்லியுள்ளோம், கடவுளையும் நாங்கள் பகுத்தறிவுடன் பார்க்கிறோம்.
பேரறிவாளனை விடுதலை செய்வது குறித்து ஆளுநர் ஒரு வாரத்தில் முடிவு எடுக்க வேண்டுமென நீதிமன்றம் அறிவித்துள்ளது. ஆளுநர் நல்ல முடிவை அறிவிப்பார் என திமுக நம்புகிறது. துணை வேந்தர்களின் பதவிக்காலம் முடிந்தாலும் அவர்களுக்கு ஆளுநர் பதவி நீட்டிப்பு தருகிறார்.
இதை தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் எதிர்க்கிறார். அரசும் ஆட்சியும் எதிர்க்கிறது. ஆனால், மக்கள் பிரதிநிதிகளை எதிர்த்து செயல்படுகிறார். மூன்று தினங்கள் பொருத்திருந்து பார்ப்போம். வரும் 2ஆம் தேதி தமிழ்நாடு சட்டபேரவை கூட்டத்தில் ஆளுநர் உரையாற்ற வருகிறார். அதற்கு முன்னரே ஏழு பேர் விடுதலையில் நல்ல முடிவை அறிவித்துவிட்டு பெருமையுடன் உரையாற்றுவார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடம் திறப்பு விழாவிற்கு அதிமுகவினர் எங்களை கூப்பிடமாட்டார்கள். அப்படி கூப்பிட்டாலும் திமுக கலந்துகொள்ளாது. அதிமுக கூட்டணியிலிருந்து சில கட்சிகள் வெளியேறுவது அடுத்த வீட்டு கதை, எனக்கு தெரியாது. ஆனால் திமுக தோழமை கட்சிகளுடன் பேசும். எங்களை நம்பி புதிய கட்சிகள் வந்தால், அவர்களையும் கூட்டணியில் இணைத்துகொள்வோம். காங்கிரஸ் தமிழ்நாட்டில் தற்போது தனித்து பரப்புரை மேற்கொண்டுள்ளது. இப்போதாவது அப்படி ஒரு செயலை செய்ய வேண்டுமென முடிவு எடுத்துள்ளது பாராட்டுக்குரியது" என்றார்.