வேலூர்: வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள இரட்டை ஏரியான தாராபடவேடு ஏரி மற்றும் கழிஞ்சூர் ஏரிகளை ரூ.28.45 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கும் பணிகளை, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று (ஜன.14) பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அமைச்சர் துரைமுருகன், மீதமுள்ள 45 சதவீத பணிகளை விரைவாக மேற்கொள்ளும்படி அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது துணை மேயர் சுனில்குமார், நீர்வளத்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் பலர் உடன் இருந்தனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் துரைமுருகன், "தாராபடவேடு, கழிஞ்சூர் ஆகிய இரண்டு இரட்டை ஏரிகளின் பணிகள் 55 சதவீதம் முடிந்துள்ளது. இன்னும் ஆறு மாத காலத்திற்குள் மீதமுள்ள பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு, இரட்டை ஏரிகள் இணைத்து துவக்கப்படும்" என்றார்.
தொடர்ந்து, ஏரியைச் சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகள் எப்பொழுது அகற்றப்படும் என கேட்டதற்கு, “உரிய நேரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். காங்கேயநல்லூர், சத்துவாச்சாரியை இணைக்கும் மேம்பாலப் பணிக்கான டெண்டர் விடப்பட்டுள்ளது. அதற்கு ஒப்புதல் ஆவதற்காக காத்திருக்கிறோம்” எனத் தெரிவித்தார்.
மேலும், காட்பாடி ரயில்வே கூடுதல் மேம்பாலப் பணிகள் எப்பொழுது துவங்கப்படும் என கேட்டதற்கு, "பொங்கல் பண்டிகை கழித்து அந்தப் பணிகளும் துவங்கப்படும்" என கூறினார்.
இதையும் படிங்க: வாணியம்பாடி காவல் நிலையத்தில் சமத்துவப் பொங்கல் விழா.. உற்சாகத்துடன் கொண்டாடிய காவலர்கள்!