வேலூர் மாவட்டம் என்றாலே திமுகவின் கோட்டை என்பதுதான் பலரது நினைவுக்கும் வரக்கூடும். இங்கு நடைபெறும் சட்டப்பேரவை, நாடாளுமன்ற தேர்தல்களில் பெரும்பாலும் திமுகவினரே வெற்றி பெறுவது வழக்கம். சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில்கூட வேலூரில் உள்ள இரண்டு தொகுதிகளிலும் திமுக வேட்பாளர்கள் வெற்றிபெற்றனர். இதற்கு திமுகவின் பொருளாளரும் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவருமான துரைமுருகன்தான் முக்கிய காரணம் என்று அவரின் ஆதரவாளர்கள் கூறிவருகின்றனர்.
காட்பாடி பகுதியில் வசித்து வரும் துரைமுருகன், அந்த தொகுதியில் தொடர்ந்து போட்டியிட்டு வெற்றி பெற்று வருகிறார். வேலூர் மாவட்ட மக்களும் ஒரு மூத்த அரசியல்வாதி என்ற அடிப்படையில் நம்பிக்கையுடன் இன்றளவும் அவருக்கு வாக்களித்துவருகின்றனர்.
இந்த நிலையில், சட்டப்பேரவை பொதுக்கணக்கு குழு தலைவராக உள்ள துரைமுருகன், நேற்றும் இன்றும் வேலூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் அரசு திட்ட பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், வாணியம்பாடியில் நீண்ட நாட்களாக நிலவி வரும் மக்கள் பிரச்சனையான நியூ டவுன் மேம்பாலம் பிரச்னை குறித்து தனக்கு எதுவும் தெரியாது என அலட்சியமாக பதில் கூறியது வேலூர் மாவட்ட மக்கள் மற்றும் அரசியல் கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரசு சார்பில் நடத்தப்படும் இதுபோன்ற ஆய்வு கூட்டங்களில் தலைவராக உள்ள துரைமுருகன், அரசியல் செய்வது போல் நடந்து கொள்வது சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் மத்தியில் முகம் சுளிக்கும் வகையில் அமைந்துள்ளது. அதேபோல், வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையின்போது, தான் இந்த மண்ணில் பிறந்தவன் என்றும், உங்கள் பிரச்னைகள் அனைத்தும் எனக்கு தெரியும் என்று கூறி மகனுக்கு வாக்கு சேகரித்துவிட்டு, தற்போது வேலூர் தொகுதிக்குட்பட்ட வாணியம்பாடியில் நிலவி வரும் மக்கள் பிரச்னை குறித்து எனக்கு எதுவும் தெரியாது என்று துரைமுருகன் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே, திமுக மேலிடத்துடன் தனக்கு இருக்கும் நெருக்கத்தை பயன்படுத்தி மகனை எம்.பி ஆக்கியது மட்டுமின்றி, தெற்கு ரயில்வே எம்.பி.க்கள் குழு தலைவராகவும் தேர்ந்தெடுக்க வைத்தது திமுகவினர் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதாக கூறப்பட்ட நிலையில், துரைமுருகனின் இந்த சர்ச்சை பேச்சு பொதுமக்கள் மட்டுமன்றி, திமுகவினர் இடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிகிறது.