வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நேற்று (செப். 29) சீர்மிகு நகரத் திட்டத்திற்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த், சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், மாநகராட்சி ஆணையர் சங்கரன், திட்டப் பொறியாளர் சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்துகெண்டனர். கூட்டத்தின்போது மாவட்ட திட்டப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் தெரிவித்ததாவது, "சீர்மிகு நகரத்திற்கான இந்த ஆய்வுக் கூட்டம் நான்கு மாதத்திற்கு ஒரு முறை நடத்தப்பட வேண்டும். ஆனால், மாவட்ட நிர்வாகம் அப்படி செய்யவில்லை. இனியாவது இதை முறையாக நடத்து வேண்டும். ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சீர்மிகு நகர திட்டத்தில், எந்தெந்த திட்டங்கள் நிறைவு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து இன்று (செப். 30) நடக்கும் ஆய்வுக் கூட்டத்தில் நாங்கள் விவாதித்தோம்.
குறிப்பாக மாவட்டத்தில் அதிகமான அளவில் குப்பை தேங்குகிறது. இவற்றை முறையாக அப்புறப்படுத்தி மறுசுழற்சி செய்ய வேண்டும். இதுவரை தெருக்களிலோ, சாலைகளிலோ கழிவு நீர் திட்டப் பணிகள் முடிவடைந்ததாக தெரியவில்லை' என்றார்.
மேலும் பெரியார் சிலைகள் அவமதிப்பு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர், "நாட்டை கொள்ளையடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ள அதிமுக ஆட்சி இருக்கும் வரை பெரியார் கொள்கைகள் காற்றில் பறக்க விடப்படும். ஆறு மாதத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் முதலமைச்சர் ஆவார். பின்னர் பெரியார் சிலை மீது கை வைக்க யாருக்கு தைரியம் உள்ளது என்று பார்ப்போம்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'ஒற்றுமையாகயிருந்தால் கரோனாவை ஒழித்துக் கட்ட முடியும்' - கதிர் ஆனந்த்