வேலூர்: காட்பாடி சித்தூர் பேருந்து நிலையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மேற்கு ஒன்றியம் சார்பில் பொது உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் ஒன்றியச் செயலாளர் தணிகாசலம் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக திமுக பொதுச்செயலாளரும் தமிழ்நாடு நீர் வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் கலந்துகொண்டு திமுக நிர்வாகிகள் மத்தியில் சிறப்புரை ஆற்றினார்.
மேலும், திமுக பொது உறுப்பினர்களுக்கான ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது, அவரிடம் மகாத்மா காந்தி மற்றும் திருவள்ளுவரின் சிலைகளை நீதிமன்றங்களில் வைக்கவும், சட்டமேதை அம்பேத்கரின் உருவப்படங்கள் மற்றும் சிலைகளை நீதிமன்ற வளாகங்களில் வைக்கக்கூடாது எனவும்; தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாவட்ட நீதிமன்றங்களுக்கு சென்னை உயர் நீதிமன்ற பதிவுத்துறை அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு; “நான் இன்னும் இந்த சுற்றறிக்கையைப் பார்க்கவில்லை. பார்த்தவுடன் பதில் சொல்கிறேன்” என்றார்.
மேலும், மணிப்பூர் விவகாரம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் துரைமுருகன்,"பிரதமர் மோடியே சொன்னார். நாடே வெட்கி தலை குனிகிறது. அப்படிப்பட்ட ஒரு சம்பவம் நடந்துள்ள நிலையில் மத்திய அரசு மெளனம் சாதிப்பது ஆச்சரியம் தான்,"என்றார்.
சமீபத்தில், டெல்லியில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20ஆம் தேதி தொடங்கியுள்ளது. இந்த நிலையில், அதற்கு சற்று முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், "மணிப்பூரில் பழங்குடியின பெண்களுக்கு நேர்ந்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டுக்கே அவமானம். இச்சம்பவம் மிகவும் வெட்கக்கேடானது, முற்றிலும் நாகரிகம் அற்றது.
இதுபோன்ற கொடூர குற்றச் சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருக்கவும், நமது பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் மாநில அரசுகள் சட்டம் ஒழுங்கை வலுப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இந்த சம்பவத்துக்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளிக்கிறேன். நீதியை நிலை நாட்டுவதும், எளிய மக்களை பாதுகாப்பதும் நமது கூட்டுப்பொறுப்பு" எனத் தெரிவித்தார்.
முன்னதாக, மணிப்பூரில் வாழும் மெய்தீஸ் சமூகத்தினர், தங்களை பழங்குடியினர் பிரிவில் சேர்க்க வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். மெய்தீஸ் சமூகத்தினரை பழங்குடியினர் பிரிவில் சேர்ப்பதற்கு, குக்கி, நாகா, சோமி உள்ளிட்ட பழங்குடியினத்தைச் சேர்ந்த மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:இந்தியா சார்பில் யோகா போட்டியில் பங்கேற்க தாய்லாந்து பறக்கும் தஞ்சை சிறுவன்!