வேலூர் மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், வேட்புமனு பரீசிலனை தேர்தல் அலுவலர் முன்னிலையில் இன்று நடந்தது.
அப்போது தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பில் சுயேச்சையாக போட்டியிடும் பிஷப் காட்ப்ரே நோபிள் என்பவர் கடந்த முறை தேர்தல் அறிவிக்கப்பட்டபோது திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வீட்டில் நடந்த சோதனையில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுதொடர்பாக அவர் மீது வழக்கு உள்ளதாலும் அவரின் வேட்புமனுவை நிராகரிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
பின்னர் நீண்ட விவாதங்களுக்குப் பிறகு இறுதியாக நடைபெற்ற பரிசீலனையில் திமுக வேட்பாளர் வேட்புமனுவை மாவட்ட தேர்தல் அலுவலர் சண்முகசுந்தரம் ஏற்றுக்கொண்டார்.
இது குறித்து தேர்தல் அலுவலர் கூறுகையில், பணப்பட்டுவாடா புகார் அளிக்கப்பட்டிருந்தாலும் கதிர் ஆனந்த் மீது இதுவரை நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை. மேலும் கடந்த வாரம் தலைமை தேர்தல் அலுவலர் அளித்த “தேர்தலில் போட்டியிடத் தகுதியற்றோர்” பட்டியலில் அவரது பெயர் இல்லை என்பதால் அவரது மனு ஏற்றுக்கொள்ளப்பட்டதாகத் தெரிவித்தார்.
இது குறித்து திமுக வழக்கறிஞரும் மாநிலங்களவை உறுப்பினருமான வில்சன் கூறுகையில், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே திமுக வேட்பாளரின் வேட்புமனு மீது எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இது குறித்து நான் வேறு எந்தக் கருத்தும் கூற விரும்பவில்லை என்றார்.