திருப்பத்தூர் மாவட்டம் தமிழ்நாடு - ஆந்திர எல்லைப் பகுதியில் உள்ள தும்பேரி அண்ணா நகரில் வசிப்பவர் ராஜாமணி. இவர் கடந்த 8 ஆண்டுகளாக கண்பார்வைையற்று வீட்டில் எந்த வேலையும் செய்ய முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் இவருடைய மனைவி வள்ளியம்மாள் கூலி வேலைசெய்து குடும்பத்தை காப்பாற்றிவந்துள்ளார். நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான இடத்தில் குடிசை வீட்டில் இருவரும் வசித்துவந்தனர்.
இந்த நிலையில் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு வேலைசெய்து கொண்டிருந்த வள்ளியம்மாள் திடீரென பள்ளத்தில் விழுந்ததால் அவருடைய இடுப்பு உடைந்தது. அவரும் வேலை செய்ய முடியாமல் இருவரும் வீட்டிலேயே அடிப்படை வசதிகள் இன்றி தவித்துவந்தனர். இவர்களுக்கு உதவிசெய்ய யாரும் முன்வராத நிலையில், அப்பகுதியிலுள்ள சில இளைஞர்கள், முதியோர்கள் வீட்டில் அவதிப்படுவதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றியுள்ளனர். அந்த வீடியோ திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவனருளின் கவனத்திற்கும் சென்றது. இதையடுத்து 5 மணி நேரத்தில் அவர்களுக்கு முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதிகள் வழங்க அவர் உத்தரவு பிறப்பித்தார்.
அவர் உத்தரவின்பேரில், வாணியம்பாடி சமூகப் பாதுகாப்பு தனி வட்டாட்சியர் உள்ளிட்ட வருவாய்த் துறை அலுவலர்கள் நேரில் வந்து முதியோர் உதவித்தொகையின் ஆணை நகலை முதியவர்கள் இருவரிடம் வழங்கினார். இச்செயலைப் பாராட்டி அப்பகுதி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியருக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்தனர். மேலும் இவர்களுக்கு அடிப்படை வசதிகள் அனைத்தும் பூர்த்தி செய்து தரப்படும் என்றும் அலுவலர்கள் உறுதியளித்துள்ளனர்.
இதையும் படிங்க: புற்றுநோய் சிகிச்சை: அரசுப் பணியாளர்களுக்கு சம்பளத்துடன் விடுப்பு!