வேலூர்: கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தனியார்த் துறை வேலைவாய்ப்பு முகாம் வேலூர் டி.கே.எம் மகளிர் கலைக் கல்லூரியில் நாளை (டிச.16) நடைபெற உள்ளது. இது குறித்து வேலூர் மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன் வெளியிட்ட செய்திக் குறிப்பில், "முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தனியார்த் துறை வேலைவாய்ப்பு முகாம் வேலூர் சங்கரன்பாளையம் டி.கே.எம்.மகளிர் கலை, அறிவியல் கல்லூரியில் சனிக்கிழமை டிசம்பர் 16ஆம் தேதி காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற உள்ளது.
மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு தொழில் நெறி வழிகாட்டும் மையம், டி.கே.எம். மகளிர் கலை, அறிவியல் கல்லூரி இணைந்து நடத்தும் இந்த தனியார்த்துறை வேலைவாய்ப்பு முகாமில் 150க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. இதில் 10, 12ஆம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு, பிஇ, செவிலியர் பயிற்சி, பார்மசி ஆகிய கல்வித் தகுதியுடைய இளைஞர்கள் கலந்து கொள்ளலாம்.
இந்த முகாம் மூலம் தனியார் துறைகளில் வேலைவாய்ப்பு பெறுபவர்களின் வேலைவாய்ப்பு பதிவு மூப்பு ரத்து செய்யப்படமாட்டது. இந்த முகாம் முற்றிலும் இலவசமாக நடைபெற உள்ளது. எனவே, தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள இளைஞர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளவும். மேலும் விவரங்களுக்கு 0416 - 2290042, 94990 55896 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பாஜக-விற்கு இணங்காத மாநிலங்களைப் பிடிக்க இதுதான் திட்டம்.. ஜம்மு & காஷ்மீர் தீர்ப்பே உதாரணம் - உ.வாசுகி குற்றச்சாட்டு!