மத்தியில் மீண்டும் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைக்கும் பாஜக தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களில் இந்தி திணிப்பில் ஈடுபட முயற்சிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிவருகின்றன.
அதுமட்டுமல்லாமல் கடந்த சில தினங்களுக்கு முன்பு 'நாடு முழுவதும் ஒரே மொழியாக இந்தியை கொண்டு வந்தால் இந்தியாவினை அடையாளப்படுத்த முடியும்' என்று அமித் ஷா கூறியிருந்தார்.
இந்நிலையில் மத்திய அரசின் இந்தி திணிப்பிற்கு எதிராக நாளை தமிழ்நாடு முழவதும் போராட்டம் நடத்துவதாக திமுக அறிவித்திருந்தது.
இந்த சூழ்நிலையில் திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவைச் சேர்ந்த இளைஞர்கள் வேலூர் மாவட்டம் குடியாத்தம் ரயில் நிலையத்தில் இந்தி திணிப்பிற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
மேலும், ரயில் நிலைய பதாகைகளில் இந்தி மொழியில் எழுதப்பட்ட வாசகங்களை கருப்பு மை பூசி அழித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த குடியாத்தம் நகர காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட 22 பேரை கைது செய்தனர்.