வேலூர்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியைச் சேர்ந்த அப்துல் பாரி என்பவர் உடைய மகன் பஷீர். இவர் கடந்த 2015ஆம் ஆண்டு ஆம்பூரில் இருந்து அவருடைய காரில் பேரணாம்பட்டு பகுதிக்கு வந்து கொண்டிருந்து உள்ளார். அப்போது ஆம்பூர் உமராபாத் அடுத்த புதூர் என்ற இடத்தில் நிலை தடுமாறி சாலை ஓரம் இருந்த புளிய மரத்தின் மீது மோதி சம்பவ இடத்திலேயே பஷீர் உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து பஷீரின் தந்தை அப்துல் பாரி மற்றும் தாய் ஆகிய இருவரும் கடந்த 2019ஆம் ஆண்டு குடியாத்தம் சார்பு நீதிமன்றத்தில் மகன் இறப்பிற்கு இன்சூரன்ஸ் பணம் வழங்க வேண்டும் என வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரணை செய்த சார்பு நீதிபதி, யுனைடெட் இந்தியா என்ற இன்சூரன்ஸ் கம்பெனிக்கு 2020ஆம் ஆண்டு கார் இன்சூரன்ஸ் 9 லட்சத்து 92 ஆயிரத்து 200 ரூபாய் மற்றும் 7.5 சதவீதம் வட்டி உடன் 13 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டார்.
இதனை வழங்க யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி கால தாமதம் செய்ததால், உயிரிழந்த பஷீரின் தந்தை அப்துல் பாரி கடந்த 2020ஆம் ஆண்டு ஜனவரி 20அன்று இந்தியா இன்சூரன்ஸ் நிறுவன அலுவலகத்தை ஜப்தி செய்ய மனு அளித்தார். இதனை ஏற்றுக்கொண்ட குடியாத்தம் சார்பு நீதிபதி பிரபாகரன், கடந்த 2021ஆம் ஆண்டு மார்ச் 22 அன்று யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவன அலுவகத்தை ஜப்தி செய்ய உத்தரவிட்டார்.
இதன் பின்னர் யுனைடெட் இந்தியா அவகாசம் கேட்டதைத் தொடர்ந்து, இன்சூரன்ஸ் பணம் வழங்க காலம் கடத்தியதால் இன்று நீதிமன்ற அமீனா, வழக்கறிஞர் லோகநாதன் மற்றும் பாதிக்கப்பட்ட விபத்தில் உயிரிழந்த பஷீரின் தந்தை மற்றும் தாய் ஆகியோர் நீதிமன்ற உத்தரவுப்படி இன்சூரன்ஸ் நிறுவன அலுவலகத்தை ஜப்தி செய்யச் சென்றனர்.
அப்போது இன்சூரன்ஸ் நிறுவன அலுவலக அதிகாரிகள் 15 நாட்கள் அவகாசம் கேட்டதை தொடர்ந்து நீதிமன்றம் அமீனா மற்றும் வழக்கறிஞர்கள் ஆகியோர் திரும்பிச் சென்றனர். 8 வருடத்திற்கு முன்பாக விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும் இன்சூரன்ஸ் நிறுவனம் பணம் வழங்காதது பொதுமக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: 880 கேரட் ஒரே கல்லாலான வைடூரியம் பொருந்திய தங்க கிரீடம் விநாயகருக்கு அணிவிப்பு!