வேலூர் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினசரி பாதிப்பு 400-ஐ தாண்டிய வண்ணம் உள்ளன. இது ஒருபுறமிருக்க கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது.
வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் 450 படுக்கை வசதிகளுடன் கரோனா சிகிச்சை வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர வேலூர் பென்ட்லேன்ட் அரசு மருத்துவமனையிலும் சிறப்பு வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. விஐடி பல்கலைக்கழகத்தில் ஆயிரம் படுக்கை வசதியுடன் சித்த மருத்துவ சிகிச்சை சிறப்பு மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. குடியாத்தம் அருகே உள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரியில் தற்போது வார்டுகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு ஒரு நாளைக்கு 300 க்கும் மேற்பட்டவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இவர்களில் பாதிப்பு அதிகமானவர்கள் மட்டுமே மருத்துவமனையில் சேர்க்கப்படுகின்றனர். குறைவான பாதிப்பு உள்ளவர்கள் பென்ட்லேன்ட் அரசு ஆஸ்பத்திரியிலும், மிகக் குறைவான பாதிப்பு உள்ளவர்கள் விஐடியில் உள்ள சித்த மருத்துவ சிகிச்சை முகாமிற்கும் அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் தற்போது 450 படுக்கை வசதிகள் கொண்ட வார்டு உள்ளது. இதில் தற்போது 285 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாதிப்பு அதிகமானவர்கள் மட்டுமே அரசு மருத்துவமனையில் சேர்க்கப்படுகின்றனர். எனையவர்கள் சிறப்பு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.அனைவருக்கும் அரசு மருத்துவமனையில் இடம் கொடுத்தால் பாதிப்பு அதிகமானவர்களுக்கு சிகிச்சை அளிக்கக் முடியாத நிலை ஏற்படும். எனவே குறைவான பாதிப்பு உள்ளவர்கள் சிறப்பு முகாம்களில் தங்கி சிகிச்சை பெறலாம் அல்லது வீடுகளிலும் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வேலூரில் உள்ள சிஎம்சி மருத்துவமனை, நறுவி மருத்துவமனை, நாராயணி மருத்துவமனைகளில் கரோனா சிறப்பு சிகிச்சை வார்டுகள் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த மருத்துவமனைகளில் நேற்று(ஏப்ரல். 29) கரோனா வார்டுகள் நிரம்பியது. தனியார் மருத்துவமனைகளில் வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து சிபாரிசுக் கடிதத்துடன் வருபவர்களுக்கு கூட இடம் கொடுக்க முடியாத நிலை உள்ளதாக தெரிவித்துள்ளனர்.