பிரதமர் நரேந்திர மோடியின் உத்தரவின்படி நாடு முழுவதும் வருகின்ற 16ஆம் தேதி கரோனா வைரஸுக்கான தடுப்பூசி போடும் பணிகள் தொடங்க உள்ளன. இந்நிலையில் தமிழ்நாட்டிற்குத் தேவையான தடுப்பூசிகள் பூனேவில் இருந்து நேற்று (ஜன.12) தமிழ்நாடு வந்தடைந்தது.
இந்த தடுப்பூசிகள் அனைத்தும் அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்ட நிலையில், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்திற்கான 42 ஆயிரத்து 100 தடுப்பூசிகள் இன்று (ஜன.13) வேலூர் மண்டல குளிர் சேமிப்பு கிடங்கிற்கு வந்தடைந்தன.
இதுகுறித்து வேலூர் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் மனிவண்ணன் ஈடிவி பாரத்திடம் கூறுகையில், வேலூர் மாவட்டத்திற்கு மட்டும் சுமார் 18 ஆயிரத்து 600 கரோனா வைரஸுக்கான தடுப்பூசிகளை தமிழ்நாடு அரசு வழங்கி உள்ளது. முதற்கட்டமாக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் வைத்து வருகின்ற 16ஆம் தேதி அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளைச் சேர்ந்த முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசிகள் போடப்படும்.
குறுந்தகவல் அனுப்பப்படும்
இவர்களது தொடர்பு எண்ணுடன் கூடிய தரவுகளை ஏற்கெனவே பெற்றுள்ளோம். இதன் உதவியுடன் தடுப்பூசி போடவேண்டியவருக்கு தடுப்பூசி போடப்படும் நாளுக்கு முன்னதாக குறுந்தகவல் அனுப்பப்படும். பின்னர் அவருக்கு தடுப்பூசி போடப்படும். முதல் ஊசி போட்டுக்கொண்டவர்களுக்கு 28 நாட்கள் கழித்து மீண்டும் ஒரு ஊசி போடப்படும்.
இதையும் படிங்க:கீழடி, ஆதிச்சநல்லூர் அகழாய்வு செய்ய மத்திய அரசு அனுமதி!