வேலூர் மாவட்டம் ஆம்பூர் பெரியாங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார் (20). இவர் நேற்று இரவு தனது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது திடீரென அருண்குமார் அலறும் சத்தம் கேட்டு அவரது வீட்டினரும், அக்கம்பக்கத்தினரும் சென்று பார்த்தபோது அருண்குமார் படுத்திருந்த அறையின் கான்கிரீட் மேல் தளம் இடிந்து அவரின் தலை மீது விழுந்து ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.
இதனையடுத்து அருண்குமாரின் குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அருண்குமார் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இளைஞர் ஒருவர் கான்கிரீட் மேல்தளம் இடிந்து விழுந்ததில் பலியான சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.