சென்னையிலுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தை இழிவுபடுத்தியும், கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்கள், பெண் தோழர்கள் குறித்து அவதூறாக முகநூலில் பதிவிட்டு வன்முறையை தூண்டும் சமூக விரோதிகளை கைது செய்யக்கோரி வேலூர் ஆட்சியர் அலுவலகம் முன்பும், தொரப்பாடியிலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் குடியாத்தம் முன்னாள் எம்எல்ஏ லதா தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் கைது செய்ய முயன்ற போது, காவல் துறையினருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ லதா உள்பட 10 பேர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
இது குறித்து லதா கூறுகையில், எங்கள் இயக்கத்தையும், இயக்கத்தினரையும் சமூக வலைதளங்களில் இழிவுபடுத்துபவர்களை வன்மையாக கண்டிக்கிறோம். அவர்களை அரசு விரைந்து கைது செய்ய வேண்டும். இல்லையென்றால் அடுத்தக்கட்டமாக சிறை நிரப்பும் போராட்டத்தை மேற்கொள்ள உள்ளோம் என தெரிவித்தார்.