வேலூரில் வரும் ஆகஸ்ட் ஐந்தாம் தேதி நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் வேலூர், அணைக்கட்டு, கேவி குப்பம், குடியாத்தம், ஆம்பூர், வாணியம்பாடி ஆகிய ஆறு சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கிய ஆயிரத்து 553 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இதற்கான தேர்தல் பணியில் ஆசிரியர்கள் உள்பட ஏழாயிரத்து 557 ஊழியர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இவர்களுக்கான முதற்கட்ட பயிற்சி அந்தந்த சட்டப்பேரவைத் தொகுதிகளில் நடைபெற்றது.
வேலூரில் தனபாக்கியம் கிருஷ்ணசாமி மகளிர் கல்லூரி, அரியூர் ஸ்பார்க் மெட்ரிக் பள்ளி, ஆம்பூர் இந்து மேல்நிலைப்பள்ளி, குடியாத்தம் கே.எம்.ஜி. கல்லூரி, வாணியம்பாடி, கேவி குப்பம் ஆகிய தொகுதிகளில் இப்பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன.
இப்பயிற்சியில் ஆயிரத்து 233 பேர் கலந்துகொள்ளவில்லை. பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ளாத அலுவலர்கள் மீது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி 1950/1951 கீழ் விளக்கம் கோரும் குறிப்பாணை அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இவர்களுக்கு வரும் 18ஆம் தேதி மீண்டும் பயிற்சியளிக்க மாவட்ட தேர்தல் அலுவலர் உத்தரவிட்டுள்ளார். இருப்பினும் இந்தப் பயிற்சியில் கலந்துகொள்ளாதவர்கள் அனைவரிடமும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இவர்கள் இன்று மாவட்ட தேர்தல் அலுவலர் சண்முக சுந்தரத்திடம் விளக்கக் கடிதங்களை அளிக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது. அவர்கள் அளிக்கும் விளக்கம் ஏற்புடையதாக இல்லாமல் இருப்பின் அவர்களுக்கு பணியிடமாறுதல் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் பயிற்சியை அலட்சியமாக எடுத்துக் கொண்ட அலுவலர்கள் மாவட்ட தேர்தல் அலுவலரின் இந்த திடீர் நடவடிக்கையால் அதிர்ச்சியடைந்துள்ளனர்.