வேலூர் மாவட்டம் சேர்க்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில் அம்மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்தப் பள்ளியில் 2019ஆம் ஆண்டு பன்னிரெண்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் குறைந்த அளவிலேயே மாணவர்கள் தேர்ச்சியடைந்ததால் வரும் ஆண்டுகளில் மாணவர்கள் அதிக தேர்ச்சி விழுக்காடு பெற ஆசிரியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஆலோசனைகள் வழங்கினார்.
தொடர்ந்து ஆறு, ஏழு, எட்டாம் வகுப்பு மாணவர்களை வகுப்பறையில் சென்று நேரடியாகச் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தார். அப்போது கற்றலில் பின்தங்கிய மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு, எழுதுதல், வாசித்தல் ஆகிய பயிற்சிகளை அளிக்கும்படி ஆசிரியர்களுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.
இயற்பியல் ஆசிரியர் வசந்த் என்பவர் பள்ளிக்கு வராமல் தொடர்ந்து விடுமுறையில் இருப்பதாக ஆய்வின்போது மாணவர்கள் புகார் தெரிவித்தனர். இது குறித்து பள்ளி தலைமையாசிரியரிடம் மாவட்ட ஆட்சியர் விசாரணை நடத்தினார். அதில் ஆசிரியர் வசந்த் தலைமை ஆசிரியரிடம் எந்த அனுமதியும் பெறாமல் அவர் விருப்பத்திற்கு ஏற்ப அடிக்கடி விடுமுறை எடுத்தது தெரியவந்தது.
இதையடுத்து ஆசிரியர் வசந்தை உடனடியாகப் பணியிடை நீக்கம்செய்து மாவட்ட ஆட்சியர் அதிரடியாக உத்தரவு பிறப்பித்தார். தொடர்ந்து பள்ளியில் மாணவர்களுக்கு சத்துணவு தரமானதாக வழங்கப்படுகிறதா என்பது குறித்தும் ஆய்வுசெய்தார்.
அப்போது அவரும் சத்துணவு சாப்பாட்டை சாப்பிட்டுப் பார்த்தார். பள்ளி முழுவதும் அனைத்து இடங்களிலும் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக மாவட்ட ஆட்சியர் ஆய்வுமேற்கொண்டார் மாவட்ட ஆட்சியரின் இந்த நடவடிக்கையைப் பார்த்து பள்ளி ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
மேலும் இதுபோன்று அவ்வப்போது மாவட்டம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் மாவட்ட ஆட்சியர் ஆய்வுமேற்கொண்டால் ஆசிரியர்கள் பொறுப்புடன் பணியாற்றி மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கப் பாடுபடுவார்கள் என சமூக செயற்பாட்டாளர்கள் கருத்து தெரிவித்தனர்.
இதையும் படிங்க :லாட்டரி சீட்டுகள் விற்ற நான்கு பேர் கைது