வேலூர்: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய இன்று (பிப். 04) கடைசி நாள் என்பதால், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் கூட்டம் கூட்டமாக வந்து மனு தாக்கல் செய்தனர்.
இந்நிலையில், வேலூர் மாநகராட்சியின் 56ஆவது வார்டில், நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் துளசி என்பவர், வேட்பு மனு தாக்கல் செய்ய நான்காவது மண்டல அலுவலகத்திற்கு வந்தார்.
அவருடன் இருவர் மட்டுமே உள்ளே செல்ல காவல் துறையினர் அனுமதியளித்துள்ளனர். அதேசமயம், வேலூர் தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் கார்த்திகேயன் தலைமையில் 20 பேர் கும்பலாக வேட்பாளர்களுடன் உள்ளே சென்று வேட்பு மனுவைத் தாக்கல் செய்தனர்.
ஒருதலைபட்சமாக நடந்துகொண்டது குறித்து, நாம் தமிழர் கட்சியின் வேலூர் தொகுதியின் துணைத் தலைவர் சங்கர் அலுவலர்களிடம் கேள்வி எழுப்பினார். இதனால், அவரை சட்டப்பேரவை உறுப்பினர் கார்த்திகேயனின் ஆதரவாளர்கள் சரமாரியாகத் தாக்கினர்.
மேலும், தகாத வார்த்தைகளால் திட்டி, அவரை அங்கிருந்து விரட்டியடித்தனர். தாக்குதல் நடத்தியவர்களை தடுக்காமல், காவல் துறையினர் வேடிக்கைப் பார்த்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: Urban Local Body Election: 'நான் தம்பிகளுக்கு எல்லாம் ஆச்சி' - 75 வயதில் வேட்பு மனு தாக்கல் செய்த நாதக உறுப்பினர்